2.44 காரணி ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்க தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடத்த அரசு உறுதியளித்தால் நாளை முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கி உள்ளதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 750 கோடி ரூபா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்த போதும் 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ள நிலையில், 750 கோடி ரூபாய் ஏற்க முடியாது என தெரிவித்த தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர்.
இந்நிலையில், வேலை நிறுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றில் எடுத்துகப் கொள்ளப்பட்ட நிலையில் ஊதிய உயர்வு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 2.44 காரணி ஊதியத்தை தற்காலிகமாக ஏற்க தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, நல்ல முடிவுடன் தொழிலாளர்கள் நாளை பணிக்கு திரும்புவார்கள் என நம்புவதாக கூறிய நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர். இதனையடுத்து, நாளை நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை வேலை நிறுத்தம் தொடரும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.