1984 சீக்கியர் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்கு புதிதாக சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றினை அமைக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரம் தொடர்பாக 186 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நிலுவையில் உள்ள இந்த வழக்குகள் தொடர்பாக விசாரிக்க புதிதாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்போவதாகவும் இந்தக் குழுவுக்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமை வகிப்பார் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்றைக்குள் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவுப் பட்டியலை அனுப்புமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிதாக அமையுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் ஒரு ஓய்வு பெற்று காவல்துறை அதிகாரியும் பணியில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவரும் இடம் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
1984 சீக்கியர் கலவரம் தொடர்பாக பதிவான 241 வழக்குகளில் 186 வழக்குகள் எவ்வித விசாரணையும் இல்லாமலேயே முடிக்கப்பட்டுள்ளதை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வை குழு கண்டறிந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே தற்போது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.