பொலிவுட் நாயகி வித்யா பாலன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரபல எழுத்தாளர் வெளியிட்ட நூலின் உரிமையை வாங்கியுள்ளார்.
மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்தியாவின் முதல் மற்றும் கடைசி பெண்மணியான இந்திரா காந்தி 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ், ‘இந்திரா: இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமர்’ என்ற நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகை மறைந்த சில்க் ஸ்மிதா வேடத்தில் ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை வித்யா பாலன் இந்த நூலினை திரைப்படம் ஆக தயாரிப்பதற்கான உரிமையை ராய் கபூர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சகாரிகா கோஷிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை சகாரிகா கோஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திராவை வெள்ளித்திரையில் பார்ப்பதற்காக பரவசத்துடன் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.