குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அசராங்கமே பாராளுமன்றில் பதற்ற நிலையை உருவாக்கியது என கபே என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த பாராளுமன்ற விவாரதங்களை ஒத்தி வைக்கும் நோக்கில் அரசாங்கம் வேண்டுமென்றே இந்த பதற்ற நிலையை உருவாக்கியது என சுட்டிக்காட்டியுள்ளது. கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பிணை முறி மோசடியுடன் யாருக்கு தொடர்பு உண்டு என்பதனை அரசாங்கம் நன்கு அறியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினர் பாராளுமன்றில் குழப்பம் விளைவிக்கப்பட வேண்டும் என்பதனை விரும்பினார்கள் என தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக பாராளுமன்றில் பிரதமரும் இணைந்து குழப்பம் விளைவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் 2015ம் ஆண்டு பிணை முறி மோசடிகளுடன் மஹிந்தவிற்கு தொடர்பு இல்லாத நிலையில் ஏன் பிரதமர் மஹிந்தவை திருடன் என பாராளுமன்றில் குறிப்பிட வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களை திசை திருப்பும் நோக்கில் இவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.