குளோபல் தமிழ்ச்செய்தியாளர்…
காசோலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டு உள்ளது. யாழ்.நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது குறித்த நபரை காவற்துறையினர் மன்றில் முற்படுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது , குறித்த சந்தேகநபர் யாழிலில் உள்ள வர்த்தகர்களுக்கு இடையில் இடைத்தரகராக செயற்பட்டு காசோலைகளை கொமிசன் வைத்து வட்டிக்கு மாற்றி கொடுத்து வந்துள்ளார்.
அந்நிலையில் வர்த்தகர் ஒருவர் சக வர்த்தகர் ஒருவருக்கு கொடுத்த காசோலை ஒன்றினை குறித்த இடைத்தரகர் வேறு நபரிடம் கொடுத்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அந்நிலையில் இடைத்தரகருக்கு காசோலையை கொடுத்த வர்த்தகர் கடன் தொல்லை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார். காசோலையை பெற்று பணம் கொடுத்த நபர் இடைத்தரகரிடம் பணத்தினை கேட்ட போது காசோலையில் பெயருள்ள நபரிடம் பணத்தினை பெற்றுக்கொள்ளுமாறு கோரி வந்துள்ளார். அதனால் பணம் கொடுத்தவர் யாழ்.காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது காசோலை உரிமையாளர், தனது உறவினரான வர்த்தகருக்கு நம்பிக்கை அடிப்படையில் காசோலையை வழங்கியதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து காவற்துறையினர் காசோலை உரிமையாளரின் உறவினரான வர்த்தகரிடம் விசாரித்த போது , தான் தற்கொலை செய்து கொண்ட வர்த்தகருக்கு தான் காசோலையை வழங்கியதாகவும் தான் அதற்காக பணம் எதனையும் பெறவில்லை எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து காவற்துறையினர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது காசோலை உரிமையாளர் மற்றும் காசோலை உரிமையாளரின் உறவினரான வர்த்தகர் ஆகிய இருவரும் காவற்துறையினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுப்பட்டனர்.
அதன் போது காசோலையை பெற்றுக்கொண்டு பணத்தினை வழங்கிய நபர் அவர்கள் இருவரையும் தனக்கு யார் என தெரியாது எனவும் , தான் வேறு ஒருவரிடம் தான் காசோலையை பெற்று பணத்தினை கொடுத்ததாக மன்றில் சாட்சியம் அளித்தார்.
அதனை தொடர்ந்து இருவரையும் பிணையில் செல்ல நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் காசோலையை கொடுத்து பணத்தினை வாங்கிய நபரை மன்றில் முற்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது , காசோலையை கொடுத்து பணத்தினை வாங்கிய நபரை காவற்துறையினர்முற்படுத்தினார்கள்.
அதை அடுத்து நீதிவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதிவரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.
குறித்த நபர் யாழ்.வர்த்தகர்களுக்கு இடையில் கொமிசன் வைத்து காசோலைகளை மாற்றி கொடுக்கும் இடைத்தரகராக செயற்பட்டு வருபவர் எனவும் அவருக்கு யாழ்ப்பாண காவற்துறை உத்தியோகஸ்தர்கள் சிலர் மத்தியில் அதீத செல்வாக்கு உள்ளவர் எனவும் அறிய முடிகிறது.