பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன எனவும் பாராளுமன்றத்தில் பிணைமுறி விவாதம் நடைபெறாமல், கைகலப்பு சம்பவம் நடைபெற்றமை மிகவும் மோசமான செயற்பாடாகும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஐ.தே.க. வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் ஊழல், மோசடிகள் நடைபெற்றால் அதை மூடிமறைப்பதற்கு யாரும் எத்தனிக்கவேண்டிய அவசியமில்லை. பிணைமுறி விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால், தற்போது அமுலிலுள்ள தகவலறியும் சட்டமூலம் மக்கள் அதனை தெளிவாக அறிந்துகொள்ளமுடியும்.
இப்படியான சூழ்நிலையில், பிழையான தகவல்களை வழங்கி மக்களை திசைதிருப்புவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. பிணைமுறி முறைகேட்டினால், தேசிய உற்பத்தில் நூற்றுக்கு ஒரு வீதம் குறைந்துந்துவிட்டதாக பந்துல குணவர்த்த கூறுவது பிழையான குற்றச்சாட்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிணைமுறி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் கம்பனியின் 10 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இழக்கப்பட்டுள்ள பணம் அரசாங்கத்துக்கே திரும்பிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாரிய பொருளாதார கடன் தொகையொன்று, கடன் பெற்றுக்கொண்ட நேரத்தில் அறவிடப்படும் வட்டியின் மதிப்பீட்டுத் தொகை பற்றி பல பொருளாதார நிபுணர்களும், அறிஞர்களும் தகவல் வெளியிட்டிருந்தனர்.
இதுபோன்ற நிலை உருவானது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சாதாரண மக்களுக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது. மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை சொல்லிச் சொல்லி, இந்த அரசாங்கம் பாரிய நிதி மோசடிக்கு ஆளாகியதாகவும், இதனால் நாட்டுக்கு பாரிய நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும் கிராம மக்கள் மத்தியில் போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொலைக் குற்றவாளியானாலும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினாலேயன்றி யாரையும் நாம் குற்றவாளிகாக நினைப்பது சட்டத்துக்கு விரோதமான செயலாகும். எனினும் இது தொடர்பாகவும் நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.