குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி நீதிமன்றை அவமதிக்கும் முகமாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றுக்கு வந்த சந்தேகநபரொருவருக்கே நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் தண்டனை விதித்தார்.
அது குறித்து தெரியவருவதாவது,
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணை நடைபெறும் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் தலைமுடிக்கு பல வர்ணங்களில் நிறம் பூசி , வித்தியாசமான முறையில் தலைமுடி அலங்கரித்து நீதிமன்றுக்கு ஒவ்வாத வகையில் ஆடை அணிந்து வந்துள்ளார்.
குறித்த நபர் திறந்தமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது மன்றில் அசாதாரணமான முறையில் நடந்து கொண்டார். அதன்பின்னர் குறித்தநபரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் குறித்த நபர் கூண்டில் ஏறி நிற்கும் போதும் அசாதரணமாக செயற்பட்டார்.
அதனை அடுத்து குறித்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதியுமாறு நீதிமன்ற காவல்துறையினருக்கு உத்தியோகஸ்தருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பிறிதொரு வழக்காக குறித்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.