குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
உரிமையை காகிதத்தில் மாத்திரம் வைத்து என்ன செய்ய முடியும். எமது மக்களுக்கு அபிவிருத்தியுடன் கூடிய உரிமையே தற்போது அவசியம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடும் , வேட்பாளர் அறிமுகமும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில்.உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடு வைத்த பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்துடன் பலர் பல இடங்களில் இருந்து எமது கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இதற்கு காரணம் நாங்கள் செல்லும் பாதை சரியானதாக உள்ளமையே. நாம் மக்களுக்கு நிஜாயமாக எதனை செய்ய முடியுமோ அதனையே தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு உள்ளோம். தற்போதைய கால கட்டத்தில் தமிழ் தலைமைகள் கூறுவதற்கும் மக்கள் எதிர்பார்ப்பதற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
எமது சமூகத்தில் தற்போது போதை பொருள் பாவனை கலாச்சார சீர்கேடுகள் , வேலையில்ல பிரச்சனைகள் காணப்படுகின்ற இவை எமது இருப்பையே கேள்விக்கு உள்ளாக்க உள்ளது. வேலையில்லாத பிரச்சனை தொடர்பில் சம்பந்தன் எதுவும் செய்ய முடியாது என சொல்கின்றார். ஆனால் சுமந்திரனுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெற்றுக்கொடுக்க முடிகின்றது. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமக்கு வாக்களியுங்கள் என கோரி பல சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. ஆனால் அவர்கள் எதனை செய்தார்கள் ? அவர்கள் செய்த அபிவிருத்தி என்ன ?
இவ்வாறான நிலையில் உரிமையை காகிதத்தில் வாங்கி என்ன செய்ய முடியும் எமது மக்களுக்கு தற்போது தேவையாக உள்ளது. அபிவிருத்தியுடன் கூடிய உரிமையே .. அதற்காகவே மக்கள் மாற்றத்தையும் , உண்மையான நேர்மையான புதியவர்களை தேடுகின்றார்கள். அதற்கு சரியானவர்கள் நாமே .
இம்முறை உள்ளூராட்சி தேத்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த 2010ஆம் ஆண்டு வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வீட்டுக்குள் இருந்தவர்கள். அப்போது அவர்கள் பேசவில்லை வெளியே வந்து பேசுகின்றார்கள். அதேபோலவே கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை வீட்டுக்குள் இருந்த சுரேஷ் பிரேமசந்திரன் அந்த தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தற்போது அவர்களை விமர்சிக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் இனியும் இவ்வாறானவர்களை நம்பி ஏமாற கூடாது. நாம் மக்களின் கிராமிய அபிவிருத்தியையும் , முன்னேற்றத்தையும் மேற்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்.அதற்கு தேவையானவற்றை செய்ய நாம் தயாராகவே இருக்கின்றோம். அத்துடன் காணாமல் போனோர் விடயம் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி வருகின்றேன். என மேலும் தெரிவித்தார்.