“விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதில், இந்தியாவுக்கு இருந்த முக்கியத்துவத்தினை நாம் நன்றாக அறிந்து வைத்திருந்தோம்.” அதன்படி இந்தியாவுடன் இணைந்து யுத்த வெற்றிக்கான இராணுவ தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, வீடுதலைப் புலிகளை தோற்கடித்து, யுத்த வெற்றியையும் பெற்றோம்” என இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாக, கருத்து வெளியிட்ட அவர், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்பிருந்த தலைவர்களும், அரசாங்கங்களும் முன்னெடுத்தன. எனினும் புலிகளை தோற்கடிக்கவோ, அல்லது முடிவுக்கு கொண்டுவரவோ எவராலும் முடிந்திருக்கவில்லை. இவ்வாறான சூழலில், 30 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் தொடர்ந்த யுத்தத்தை, அதனை முன்னெடுத்த விடுதலைப் புலிகளை் இயக்கத்தை, 3 வருட சிறுகாலப்பகுதிக்குள் நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். இத்தகைய வெற்றிக்கு காரணம், புலிகளுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எடுத்ததோடு சரியான தலைவர்களையும் உருவாக்கியமையே ஆகும்.” எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“இந்த வகையில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததது மாத்திரமல்லாமல் அதன்பின் நாட்டை அபிவிருத்திப்பாதையில் கொண்டு சென்றோம் என்பதை குறிப்பிட்டு கூறியாக வேண்டும். இராணுவ வீரர்களுக்காக பல்வேறு திட்டங்களையும் வகுத்து அவர்களை கௌரவப்படுத்தினோம்.”
“ஆனால் கடந்தகாலத்தில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து நாட்டை கட்டியெழுப்பிய நிலை தற்போது காணப்படவில்லை. தற்போது நாட்டில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, மக்கள் கடன்சுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு இப்போதுள்ள அரசு நிறுவனங்கள் முறையாக செயற்படாதமையே காரணம்.”
முக்கியமாக நாட்டை அழிவுக்கு பாதைக்கு கொண்டு சென்ற 30 வருடத்திற்கும் மேலான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் வகையில் சர்வதேசத்திற்கு அடிபணியவைக்கும் செயற்பாடுகள் தொடர்கின்றன. இவற்றிற்கு எதிராக தேர்தல் வாக்குகளை நாம் பயன்படுத்தவேண்டும் என கோத்தாபய ராஜபக்ஸ, வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாக வலியுறுத்தி உள்ளார்.