காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தி உள்ளனர். இந்தப் போராட்டம்,
“சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தாய்மாரை, தமிழர் தன்னெழுச்சியை மழுங்கடித்து, துரோகம் மூலம் சிறிலங்கா அரசைப் பாதுகாத்த எட்டப்பர்கள்”, “அமரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தமிழர்களுக்கு தீர்வைத்தரவிடாமல் தடைபோட்டு, சிறிலங்கா அரசைப் பாதுகாக்கும் விலைபோனோர் கூட்டம்,” என்ற பதாதைகளுடன் முன்னேடுக்கப்பட்டு இருந்தது.
இதேவேளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின், ஒளிப்படங்களுக்கு மண் அள்ளிப்போட்டு திட்டிய காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே ஜனாதிபதி சந்திப்பில் இடையில் புகுந்து குழப்பினார் எனவும், தங்களுக்கு துரோகம் செய்ததாகவும், குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் “நாங்கள் தெரிவு செய்த எதிர்க்கட்சி தலைவர், அவருடன் நாடாளுமன்றில் இருக்கும் உறுப்பினர்களால், எமக்கான தீர்வை, வழங்க முடியாவிடின், ஏன் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வவுனியாவில் முன்னேடுக்கப்படும் சுழற்சி முறையிலான இந்த உண்ணாவிரதப் போராட்டம் 324 நாளாக தொடரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்ட்டதாக தெரிவிக்கப்படுகிறது.