திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தரணி என்ற 6 வயது சிறுமி தன் தந்தையின் மதுப்பழக்கத்தை நிறுத்தச் செய்து வீட்டுக்காக ஒரு கழிப்பறையைக் கட்ட வைத்துள்ளார். இதனையடுத்து கழிப்பறை வேண்டும் என்ற சிறுமியின் தாயார் கனவு சிறுமி மூலம் பூர்த்தியாகியுள்ளது.
அம்பாத்துறை பஞ்சாயத்தை குரும்பாப்பட்டியைச் சேர்ந்த ஆர்.கார்த்திகா தன் மகளால் நிறைவேறிய கனவு குறித்துக் கூறியபோது, “என் மகள் தரணியினால் எங்கள் குடும்பம் மகிழ்ச்சிக்குத் திரும்பியுள்ளது” என்றார்.
6 வயது மகள் தரணி, திறந்தவெளியில் மலம் கழிப்பது தன் தாயாரின் கவுரவத்துக்கு இழுக்கு, இது அவருக்கு கடும் சங்கடத்தை அளிக்கிறது என்று தன் தந்தையை நச்சரித்து கழிப்பறை கட்டவைத்துள்ளார். “என் கணவருக்கு வேறு வழியே இல்லை, கடைசியில் குழந்தை கூறுவதற்கு சம்மதம் தெரிவித்தார்” என்றார்.
தந்தை தினமும் குடித்து விட்டு தாயுடன் சண்டையிடுவதைப் பார்த்து வேதனை அடைந்த சிறுமி, ‘இப்படியே செஞ்சுக்கிட்டிருந்தேனா நானும், அம்மாவும் தாத்தா பாட்டி வீட்டுக்குப் போயிடுவோம், நீ தனியாக கஷ்டப்பட வேண்டியதுதான்’ என்று தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனால் வேதனையடைந்த தந்தை ராஜபாண்டி மதுப்பழக்கத்திலிருந்து விடுபட்டு, பொறுப்பாக கேரளாவுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். “5 வருடங்களாக மதுப்பழக்கத்தை விட்டுவிடுமாறு நான் அவரை கெஞ்சினேன், அவர் கேட்கவில்லை, நான் சாதிக்காததை என் மகள் சாதித்துள்ளார்” என்றார் தாயார் கார்த்திகா.
தன் ஆசிரியர் சுகாதாரம் பற்றி தனக்குக் கற்றுத் தந்ததாலும், திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று பள்ளி ஆசிரியர் கூறியதாலுமே தனக்கு உத்வேகம் பிறந்தது என்றும் இதனால் தன் தந்தையை நச்சரித்து கழிப்பறையை கட்ட வைத்ததாகவும் சிறுமி தரணி கூறியுள்ளார்.