கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதென உறுதியாகியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
குறித்த தினத்தில் நாடாளுமன்ற அமர்வுகளைக் குழப்புவதற்காக திட்டமிடப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கையை அன்றைய தினம் சமர்ப்பிக்க முடியாதெனவும், எதிர்வரும் 17ஆம் திகதி அதனைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்திருந்தார். அதன் பின்னரும், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன சபாநாயகரிடம் தொடர்ந்தும் குறித்த அறிக்கையை கோரி வந்ததுடன் நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மேலும் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலரின் நடவடிக்கை திட்டமிடப்பட்ட ஒன்றெனவும், இதன் காரணமாகவே பிரதமர் உரையாற்றும் போதும் தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது