நடுவர் மீதான கோபத்தில் பந்தை தரையில் வேகமாக வீசியதற்காக இந்திய அணித் தலைவர் விராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 307 ஓட்டங்களை எடுத்துள்ளநிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.
அதன்பின்னர் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கிய நிலையில் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தமையினால் சிறிது நேரம் விளையாட்டு நிறுத்தப்பட்டு பின்னர் ஆரம்பமானபோது மைதானம் மிகவும் ஈரப்பதமாக இருந்தமையினால் இந்திய பந்து வீச்சாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இதனால் விராட் கோலி மைதான நடுவர் மைக்கேல் காக்கிடம் முறைப்பாடு செய்தார் எனினும் நடுவர் விராட் கோலியின் முறைப்பாட்டினை ஏற்றுகொள்ளவில்லை என்பதனால் அவர் பந்தை தரையில் வேகமாக வீசினார்.
இந்தநிலையில் மைதான நடுவரிடம் வாக்குவாதம் செய்ததும், அதன் தொடர்ச்சியாக பந்தை தரையில் வீசியதும் ஐசிசியின் வீரர்கள் நன்னடத்தை விதிக்கு மாறானது என தெரிவித்தே செஞ்சூரியன் டெஸ்ட் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாக கட்ட வேண்டும் என்று ஐசிசி உத்தரவிட்டுள்ளது. தென்னர்பிரிக்காவுக்கு எதிராக 153 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் அணித்தலைவர் பதவியில் டொன் பிரட்மேன் சாதனையை விராட் கோலி சமன் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.