218
கிளிநொச்சி இரத்தினபுரத்தில் உள்ள சனசமூக நிலையம் கடந்த பல மாதங்களாக உடைந்த நிலையில் காணப்படுகின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவித்தபோதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
முன்பள்ளியாக கடந்த சில வருடங்களின் முன்னர் திறந்து வைக்கப்பட்ட குறித்த கட்டிடம் பின்னர் அப் பகுதி மக்களினால் சனசமூக நிலையமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. மாணவர்களின் எண்ணிக்கை போதாமை காரணமாக குறித்த முன்பள்ளி சனசமூக நிலையமாக மாற்றப்பட்டிருந்தது.
கிளிநொச்சி இரத்தினபுரம் 16வீட்டுத் திட்டத்தில் உள்ள குறித்த சனசமூக கட்டிடத்தை அப் பகுதி மக்கள் தமது பொதுநிகழ்வுகளை நடாத்த பயன்படுத்தி வந்தனர். அத்துடன் மழைக்கால அனர்த்தங்களின்போது தற்காலிக முகமாகவும் அக் கட்டிடத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குறித்த கட்டிடம் உடைந்த நிலையில் காணப்படுகின்றது. கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் திறந்து வைக்கப்பட்ட குறித்த கட்டிடம், தரமான மரங்களினால் அமைக்கப்பட்டாமை காரணமாகவே உடைந்து வீழ்ந்துள்ளது.
இரத்தினபரும் 16 வீட்டுத்திட்ட மக்கள் அரச அதிகாரிகளின் பாரபட்சம் காரணமாக வீட்டுத்திட்டத்தை இழந்து தற்காலிக வீடுகளில் வாழ்கின்றனர். இந்த நிலையில் தம்மை கைவிட்டதைப்போன்று, தமது சனசமூக நிலையத்தையும் கைவிட்டுள்ளனரா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
புதிதாக கரைச்சிப் பிரதேச செயலாளராக பொறுப்பேற்றுள்ள அதிகாரியும் கரைச்சிப் பிரதேச காணி உத்தியோகத்தரும் தமது தற்காலிக வீட்டு வாழ்வுக்கு முடிவு கட்ட விரைவில் முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த காலத்தில் இருந்த அதிகாரிகள் தம்மை பாரபட்சம் காரணமாக பழிவாங்கியதுடன் தமது காணிகளை பிடுங்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டனர்.
Spread the love