தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். நாம் பெற்ற அறிவை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டங்கள் கூட்டி எமது மக்களுக்கு புரிந்துணர்வையும் அரசியல் அறிவையும் புகட்ட துறைசார் நிபுணர்களை வேண்டி நின்றோம். இன்று வந்துள்ள எமது மதிப்புக்குரிய பேச்சாளர்கள் எமது வேண்டுதலுக்கிணங்கி இங்கு வந்துள்ளார்கள். அவர்களை அறிமுகஞ் செய்து வைப்பதற்கு முன்னர் ஒரு சில வார்த்தைகள்.
மக்களுக்கெடுத்துக்கூறும் கூட்டத் தொடரின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இவ்வாறான தெளிவுபடுத்தும் கூட்டங்கள் வடகிழக்கு மண்ணில் காலத்திற்குக் காலம் இனித் தொடர்ந்து நடப்பன. எமது பொது மக்களின் அரசியல் அறிவை வளர்ப்பதே எமது குறிக்கோள். இதில் கட்சி அரசியல் எதுவும் இல்லை. சிலர் தங்கள் கட்சிகள் பற்றியும் அதில்த் தமது எதிர்காலப் பங்கு பற்றியும் சதா சிந்தித்துக் கொண்டிருப்பதால் எங்களையுங் கட்சி ஆர்வம் கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தி நாமும் கட்சி ரீதியாக நலம் பெறப் பார்க்கின்றோம் என்று எமக்கெதிராகச் சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள். தேர்தல் காலத்தில் இவ்வாறான கூட்டங்களை நடத்தலாமா என்று கேட்கின்றார்கள். தேர்தல் காலத்தில் புதிய அரசியல் யாப்பு பற்றியோ அது சம்பந்தமான இடைக்கால அறிக்கை பற்றியோ ஐக்கிய நாடுகள் பிரேரணை பற்றியோ சட்டப் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் விரிவுரைகள் நடத்தலாகாது என்று தேர்தல் ஆணையாளர் விதிகள் விதித்ததாக எமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. அதனால்த் தான் சட்டக் கல்லூரிகளிலும் சர்வகலாசாலைகளிலும் இவை பற்றிய கருத்துரைகள், விரிவுரைகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. எமது இந்தக் கூட்டமும் இவ்வாறான கருத்துரைகளைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டங்களே. மக்களுக்கு அரசியல் அறிவு புகட்டும் கருத்துரைகளே இங்கு வெளியிடப்படவிருக்கின்றன.
ஒரு வேளை மக்கள் எங்களுக்கு அரசியல் அறிவைப் புகட்டக்கூடிய சந்தர்ப்பங்களும் எழலாம். ஒரு முறை வவுனியாவில் எமது அலுவலர்கள் ஒரு விவசாயியிடம் போய் ஏதோ விவசாயஞ் சம்பந்தமாக அவரின் கருத்துக்களைக் கேட்டார்கள். அதற்கு அவர் ‘எனக்கு வயது 78 ஆகிறது. இதுவரையில் உங்கள் கருத்து என்ன என்று எவரும் கேட்கவில்லை. அவர்கள் கூறுவதை நாங்கள் கேட்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள். இன்று தான் என் கருத்தைக் கேட்டுள்ளீர்கள்’ என்று கூறிவிட்டு அநுபவ ரீதியான தமது கருத்துக்களை வெளியிட்டார். ஆகவே மக்களிடம் இருந்தும் நாம் அரசியல் ரீதியாக அறியவேண்டியவை பல இருக்கலாம்.
எனினும் எந்தத் தேர்தல்க் கட்சி பற்றியோ அவற்றின் கொள்கைகள் பற்றியோ செயற்பாடுகள் பற்றியோ விமர்சிப்பதற்காக நாங்கள் இங்கு கூடவில்லை. உண்மையை விளங்கிக் கொள்ளக் கூடியுள்ளோம். உரிமைகள் கிடைக்குமா என்று உறவாட உள்ளிட்டுள்ளோம். ஆகவே இவ்வாறான கூட்டங்களைத் தடுக்க நினைப்பது மக்கள் அறிவு பெறுவதைத் தடுப்பதாகவே கொள்ள வேண்டும்.
நாம் பிப்ரவரி மாதம் 10ந் திகதிய தேர்தலை முன்னிட்டு வாய் பொத்தி கை அடக்கி நிற்க வேண்டும் என்று நினைப்பது இரக்கமற்ற செயல். மார்ச் மாதத்தில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் இடைக்கால அறிக்கை பற்றி நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை பற்றிப் பேசினால் தேர்தலைப் பாதிக்கும் என்று எண்ணுவது மடமையாகும். அவை பற்றி மக்கள் அறிந்திருப்பது அவசியம். நாம் மக்கள் அறிவையும் புரிந்துணர்வையும் அகல விரிக்கவே இந்த அப்பியாசத்தில் ஈடுபட்டுள்ளோம். அவ்வாறான புரிந்துணர்வு இன்றைய காலகட்டத்தில் அவசரமாகத் தேவையாய் இருக்கின்றது என்பது எமது கருத்து. நாங்கள் எந்தக் கட்சியையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர் அல்ல. எமது மக்களுக்கெடுத்துக்கூறும் கூட்டத் தொடரில் முதல்க் கூட்டத்தை இத்தால் அங்குரார்ப்பணம் செய்து வைப்பதில் மகிழ்வடைகின்றேன்.
இருவர் இன்றைய பேச்சாளர்கள். ஒருவர் பேராசிரியர் சுவர்ணராஜா அவர்கள். கொழும்பு றோயல் கல்லூரியில் என் சம காலத்தவரான அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளமாணிப் பரீட்சையில் முதனிலை விசேட சித்தி பெற்று தமது பட்டதாரிமேல்ப்படிப்பை யேல் சட்டக்கல்லூரியிலும், லண்டன் பொருளாதாரக் கல்லூரியிலும், இலண்டன் கிங்ஸ் கல்லூரியிலும் மேற்கொண்டு சட்ட முதுமாணி, சட்டக் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டவர். கேம்பிரட்ஜ் சர்வ கலாசாலையின் சர்வதேசச் சட்ட மையத்திலும், ஹைடல்பேர்க் மாக்ஸ் ப்ளான்க் சர்வதேசச் சட்ட மற்றும் ஒப்பீட்டுச் சட்ட நிறுவனத்திலும் திட்ட ஆதரவு பெற்ற ஆய்வாளராகக் கடமையாற்றியவர். அதன் பின் சட்ட விரிவரையாளராக கொழும்பு பல்கலைக் கழகத்தில் பணி புரிந்து அதன் பின்னர் உலகின் பல பாகங்களிலும் உள்ள சட்டக் கல்லூரிகளிலும் கலாசாலைகளிலும் விரிவுரைகள் ஆற்றியவர். தஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியின் தலைமைப் பீடாதிபதியாகவும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஊது முழா சட்டப் பேராசிரியராகவும், மலேஷpய சட்டக்கல்லூரியில் துங்கு அப்துல் ரகுமான் சர்வதேச சட்டப் பேராசிரியராகவும், ஸ்கொட்லாந்து டண்டீ சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும், வாஷpங்டன் அமெரிக்க சர்வதேச கலாசாலைப் பேராசிரியராகவும், கனேடிய டொரொண்டோ ஒஸ்கூடே மண்டப சட்டக்கல்லூரியின் பேராசிரியராகவும், பிரேசிலின் சவோ பவுலோ கெருலிடிஸ் வார்கிஸ் சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும், ஜப்பானிய கியு சட்டக்கல்லூரியிலும், சீனாவின் சியான் மாநகரத்தின் சியான் ஜியாடொங் சட்டக்கல்லூரியிலும், சீன சியாமன் சட்டக் கல்லூரியிலும் பேராசிரியராகக் கடமை புரிந்தவர். அவர் இந்திய போபால் மாநிலத்தின் தேசிய சட்டத்துறைக் கல்லூரியிலும் வேறு பல சட்டக் கல்லூரிகளிலும் பேராசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இவர் சட்டம் சம்பந்தமான பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவை வெளிநாட்டு முதலீடு சம்பந்தமான சர்வதேசச் சட்டம் பற்றியும் வேறு பல விடயங்கள் பற்றியும் வெளிவந்துள்ளன. பல நடுவர் மன்றங்களில் சட்டத்தரணியாகவும் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார். பல சர்வதேச நடுவர் மன்றங்களில் புகழ்பெற்ற நடுவராக வலம்வந்து கொண்டிருக்கின்றார். தற்போது சிங்கப்பூர் ஊது முழா சர்வதேச சட்டப்பேராசிரியராக கடமையாற்றுகின்றார். வெளிநாட்டு முதலீட்டுச் சட்டத்தில் உலக நிபுணர்களில் ஒருவராக கணிக்கப்பட்டுள்ளார். அவரின் சேவைகளை இன்று தமிழ் மக்கள் பேரவை பெற்றதையிட்டு பூரிப்படைகின்றது.
அவர் ‘சர்வதேசச் சட்டம் – தமிழர்களின் கேடயம்’ என்ற பொருள் பற்றித் தமிழில் பேச உள்ளார். ‘தமிழில் பேசுவீர்களா?’ என்று கேட்ட போது ‘என் தமிழை நான் இன்னமும் மறக்கவில்லை’ என்றார். ஒரே ஆசிரியர்களிடமே நாம் இருவரும் தமிழ் மொழியை அந்தக் காலத்தில் கற்றோம். இந்த நேரத்தில் எமது தமிழ் ஆசான்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொள்கின்றோம். அவர்கள் தான் எமக்கு தமிழ் மீது அன்பையும் பற்றையும் மதிப்பையும் வளர்த்தவர்கள்.
மற்றவர் சிரேஷ்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் அவர்கள்.610 ஒரு புகழ்பூத்த பேராசிரியரின் மகன். தம்பி குருபரன் அவர்கள் எமக்கு நாற்பத்தைந்து வருடங்கள் பின்னர் பிறந்தவர். ஆனால் சட்டத்துறையில் இன்று பிரகாசிக்கும் ஒரு இளம் நட்சத்திரம். அவர் 2009ல் கொழும்பு சர்வ கலாசாலையில் சட்ட இளமாணி விசேடப் பரீட்சையில் இரண்டாந்தர மேல் மட்டத்தில் தேறியவர். அதன் பின் ஒக்ஸ்போர்ட் சர்வ கலாசாலையில், ஃபலியொல் கல்லூரியில் முதுமாணிப்பட்டம் பெற்றவர். தற்போது இலண்டன் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெறப் படித்துக் கொண்டிருப்பவர். தற்போது யாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையின் தலைவராகக் கடமையாற்றுகின்றார். அவர் சட்டத்தரணியாகவும் 2010ல் ஏற்கப்பட்டு தற்போது மாவட்ட மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மன்றங்களில் சட்ட உரைஞராகத் தொழில் புரிந்து வருகின்றார். பல முக்கியமான வழக்குகளில் தெரிபட்டுள்ளார். கொள்கைகள் ஆய்வு சம்பந்தமான ‘அடையாளம்’ மையத்தில் ஆய்வுப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார். பல பரிசுகளைப் பெற்றவர், பல புலமைப் பரிசுகளை வென்றவர். பல சட்ட சம்பந்தமான கட்டுரைகளையும் கருத்துரைகளையும் வெளியிட்டு வருபவர். பல நாடுகளில் பல கருத்தரங்கங்களில் பங்குபற்றி வருபவர். சட்டம் சம்பந்தமான பல வெளியீடுகளை வெளியிட்டு இருப்பவர். தன்னுடைய 33வருட ஆயுட் காலத்தில் சட்டத்துறையில் பல வெற்றிகள் கண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகளைப் பத்திரிகைகளில் வெளியிட்டு வருபவர். அவர் ‘இடைக்கால வரைவுகள் – மாயைகளைக் கட்டுடைத்தல்’ என்ற பொருள் பற்றிப் பேச உள்ளார்.
ஒவ்வொருவரும் சுமார் 30 நிமிடங்களுக்குப் பேசுவார்கள். எனது தொகுப்புரை அதன் பின் இடம்பெறும். அதன் பின்னர் எமது மக்கள் தமது ஐயங்களைத் தீர்க்கக் கூடியதாக கேள்விகளை எழுத்து மூலம் கேட்கலாம். கேள்விகள் கண்ணியத்துடன் சேர்ந்த தரமான கேள்விகளாக அமைய வேண்டும். அவை இங்கு பேசப்படும் விடயங்கள் சம்பந்தமானதாக அமைய வேண்டும். தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாகப் பாவித்து அரட்டைக் கேள்விகள் கேட்டால் அவற்றிற்குப் பதில் அளிக்கப்பட மாட்டா. எவரையும் தாக்கிப் பேசும் எண்ணம் எமக்கில்லை. அரசியல் ரீதியாக எந்தவித நன்மைகளையும் எவருக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. ஆகவேதான் கேள்விகள் எவரின் நெஞ்சங்களையும் புண்படுத்தாத விதத்தில் கேட்கப்பட வேண்டும். நீங்கள் உங்கள் கேள்விகளை எழுத்தில் தந்தால் எமக்கு சௌகரியமாக இருக்கும் என்பதாலேயே இவ்வாறான ஒரு கோரிக்கையை விடுக்கின்றோம். தயவு செய்து அவ்வாறே செய்யவும்.
உங்களுக்கும் பேச்சாளர்களுக்குமிடையில் நான் தொடர்ந்து நந்தியாக இருக்காது பேராசிரியர் சுவர்ணராஜா அவர்களை ‘சர்வதேசச் சட்டம் – தமிழர்களின் கேடயம்’ என்ற பொருள் பற்றிப் பேச முதற்கண் அழைக்கின்றேன். நன்றி .
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
இணைத் தலைவர்
தமிழ் மக்கள் பேரவை