சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்காவுக்கு உலகம் எங்கும் வாழும் முஸ்லீம் மக்கள் புனித யாத்திரையை மேற்கொள்ளுகின்ற நிலையில் இந்தியாவில் இருந்தும் பல லட்சம் மக்கள் செல்லுவது வழக்கமாகும். இந்த நிலையில் ஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை இந்திய மத்திய அரசு. ரத்துசெய்துள்ளது. இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் பல நெருக்குவாரங்களை சந்தித்து வரும் நிலையில் சிறுபான்மை மக்கள்மீது மேற்கொள்ளப்படும் மற்றொரு பாரபட்சமாகவும் இது விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக்கான மானியம் ரத்துசெய்யப்படுவதாக இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்துள்ள இந்திய மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இந்த வருடம் மாத்திரம் 1.75 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து ஓர் ஆண்டுக்கு 1.70 லட்சம் பேர் மட்டுமே ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக்கான கொள்கைகளை வடிவமைப்பதற்கு, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் குழு ஒன்று அரசால் அமைக்கப்பட்டது எனவும் அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் மானியம் இரத்துசெய்யப்படுவதாகவும் இன்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறுபான்மையினரை முன்னேற்றுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.