159
இந்திய சுதந்திரப் போராட்டப் போராளியான சரஸ்வதி ராஜமணி ஒரு தமிழ்ப் பெண் போராளியாவார். தன்னுடைய 16ஆவது வயதில் சுபாஸ் சந்திரபோஷின் இந்திய சுதந்திரப் போராட்டப் படையில் இணைந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். தன்னுடைய நகைகளை விற்று போராட்டத்திற்கு உதவியவர்.
இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்காக மணி என்று ஆண் வேடமிட்டு புலனாய்வுப் போராளியாக பாடுபட்ட சரஸ்வதி பல்வேறு இன்னல்களின் மத்தியில் இறுதி வரையில் தனது கொள்கையில் உறுதியாய் இருந்து போராடியவர். ஆங்கிலப் படைகளிடம் சிக்கிய இவர் காலில் துப்பாக்கி குண்டு தாங்கி உயிர் தப்பினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு இவர் பல போராட்டங்களை நடாத்தியுள்ளார். 2004இல் தமிழகத்தில் சுனாமிப் பாதிப்பு ஏற்பட்டபோது தனது ஓய்வூதியத்தை வழங்கினார். சுபாஸ் சந்திரபோஸ் பற்றியும் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியும் இவர் கண்ணீர் சிந்த ஆற்றிய உரைகள் மக்கள் மனதில் நிலைத்தவை.
94ஆவது வயதில் கடந்த 14ஆம் திகதி மறைந்தார் சரஸ்வதி. இந்திய சுதந்திர விடுதலைக்காக ஒரு பெண்ணாக நின்று சுபாஸ் சந்திரபோஸின் படையில் அவருக்கு ஒரு மகளைப் போல நின்று போராடிய இந்தத் தமிழ்ப் போராளியின் இறுதி யாத்திரைக்கு பத்துப் பேர்கூட வருகை தரவில்லை என்று ஓர் இந்திய மாற்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சினிமாப் பிரபலங்களின் நிகழ்வுகளுக்கும் அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கும் கூட்டம் கூட்டமாக திரள்பவர்கள், ஒரு இந்திய சுந்திர விடுதலைக்காக வியர்வை சிந்திப் போராடிய தமிழ் பெண் போராளிகளுக்கு உரிய மரியாதை செலுத்தவில்லை என்றும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love