இந்தோனேசியாவில்; 17-ம் நூற்றாண்டில் டச்சு காலணித்து ஆட்சிக் காலத்தின்போது கட்டப்பட்ட பழமையான கடல்சார் அருங்காட்சியகம் இன்று தீக்கிரையாகியுள்ளது. 17 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி விலையுயர்ந்த தேயிலை, கோப்பிவிதை மற்றும் மசாலா பொருட்களை சேமித்து வைப்பதற்காக ஜகர்த்தா நகரில் மிகப்பெரிய கிடங்கு ஒன்றை 17-ம் நூற்றாண்டில் அமைத்திருந்தது.
டச்சு ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்து 1945-ம் ஆண்டு இந்தோனேசியா விடுதலை பெற்ற பின்னர் இந்த கட்டிடம் ; கடல்சார் கண்காட்சி கூடமாகவும், அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டு இங்கு பழமையான வரைபடங்கள், கப்பல்களை செப்பனிடும் உபகரணங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் கடல்சார் அருங்காட்சியகத்தின் பெரும்பகுதி எரிந்து நாசம் அடைந்துள்ளது. அங்கிருந்த பொருட்கள் மட்டுமின்றி புராதன கலையம்சம் கொண்ட டச்சு பாரம்பரியத்தை விளக்கும் அழகிய கட்டிடமும் உருக்குலைந்து காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.