கனடாவைச் சேர்ந்த பிரிட்டினி கார்கல் என்ற பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாஸ்கடூன் நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கார்கல் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருந்தார். கொலை செய்ய பயன்படுத்திய பட்டியை காவற்துறையினர் கைப்பற்றி இருந்தனர். இதன் மூலம் கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். கார்கலினின் தோழி சியனே ரோஸ் அண்டோனி மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கார்கலின் தோழி சியனே ரோஸ் அண்டோனி, தனது முகநூலில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார். இறப்பதற்கு முன் கார்கலுடன் அவர் எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார். அந்த படத்தில் கார்கலை கொல்ல பயன்படுத்திய பட்டியை சியனே அணிந்திருந்ததை காவற்துறையினர் கண்டுபிடித்தனர்.
காவற்துறையினர் நடத்திய விசாரணையில் சியனே கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குடிபோதையில் இருக்கும் போது ஏற்பட்ட சண்டையில் கார்கலை கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அப்போது நடந்தது எதுவும் தனக்கு ஞாபகம் இல்லை எனவும் தெரிவித்துள்ள சியனே கார்கலை கொன்றதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து சியனே ரோசிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் பதிவு செய்த புகைப்படத்தின் மூலம் கொலையாளி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.