குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அண்மையில் அமைச்சரவையில் இடம்பெற்ற முரண்பாட்டு நிலையை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின் போது கடும் கோபமுற்ற ஜனாதிபதி, கையில் இருந்த ஆவணங்களையும் வீசி எறிந்து விட்டு கூட்டத்தை விட்டு எழுந்து சென்றதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அவ்வாறு கோபப்படவில்லை எனவும் இயற்கை அழைத்த காரணத்தினால் ஜனாதிபதி கூட்டத்தை விட்டு வெளியேறினார் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
அமைச்சரவையில் ஜனாதிபதி கடும் ஆத்திரமுற்ற விடயத்தை மூடி மறைப்பதற்கே இவ்வாறு போலி காரணங்கள் கூறப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சிறுநீர் கழிப்பதற்கோ மலம் கழிப்பதற்கோ 30 நிமிடங்கள் தேவைப்படாது எனவும் , ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இயற்கை உபாதை எவ்வாறானது என்பதனை மக்களுக்கு அவர் விளக்க வேண்டுமெனவும் மஹிந்த கோரியுள்ளார்.