ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சை தொடர்பான வழக்குகளின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பிற்பகலில் மீண்டும் விசாரணையை ஆரம்பித்த உயர்நீதிமன்றம் ஆண்டாள் தொடர்பான வைரமுத்துவின் கருத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனக்கூறி அவர் மீது காவல்நிலையங்களில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளதுடன் வழக்கு விசாரணையை பெப்ரவரி 16ஆம் திகதிக்கு ; ஒத்திவைத்துள்ளது.
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை – உயர்நீதிமன்றம்
Jan 19, 2018 @ 07:35
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஆராய்ச்சி கட்டுரையில் இருந்த கருத்தையே வைரமுத்து மேற்கோள் காட்டியுள்ளார் எனவும் எனவே அது அவரது சொந்த கருத்தாக ஏற்றுக் கொள்ளமுடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் தான் பேசியது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வைரமுத்து தெரிவித்திருந்தார்.
எனினும் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து வருவதுடன் சென்னை உள்பட பல இடங்களில் வைரமுத்துவுக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வைரமுத்துவின் கருத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
அவரது மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போதே அதில் சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.