மலாலா யூசுப்சாயின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் தெக்ரீக்-இ-தலீபான் தீவிரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் போராடி வந்தார்.
இதனால் தீவிரவாதிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு மலாலா தாக்குதல் நடத்தியிருந்தனர். அவரது அமைதி சார்பு நடவடிக்கைகள், மதசார்பற்ற தன்மை மற்றும் தலீபான் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தலீபான் அமைப்பு அறிவித்திருந்தது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மலாலா பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்தும் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்ற அவர் தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார். மேலும் அவரது சமூக நலப்பணிகளுக்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
இந்தநிலையிலேயே , மலாலா யூசுப்சாயின் வாழ்க்கை வரலாறு குல் மகாய் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே சில இடங்களில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மலாலா யூசுப் சாயின் வாழ்க்கை வரலாற்று படத்தின் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருவதாகவும் கடந்த சில தினங்களாக நடைபெற்ற படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த்குமார் தயாரிப்பில் அம்ஜத் கான் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படம் ஜூன் மாதம் வெளியிடப்படவுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.