டெல்லி சட்டசபையில் உள்ள 20 ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையகம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு டெல்லியில் அல்கா லம்பா, ஜர்னைல் சிங், ஆதர்ஷ் சாஸ்திரி, ராஜேஷ் குப்தா உள்ளிட்ட 20 சட்டமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்ற செயலாளர்களாக நியமித்தது.
இது துணை அமைச்சர் பதவிக்கு சமமானதாக உள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் அதே நேரத்தில் துணை அமைச்சர் பொறுப்புகளையும் ஏற்றதாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். அத்துடன் இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி வழக்கும் தொடரப்பட்டது.
இவர்களை காப்பாற்றும் நோக்கில், இந்த பதவிகளை இரட்டை ஆதாய பட்டியலில் இருந்து நீக்கி கேஜரிவால் அரசு முன் திகதியிட்டு கடந்த 2016-இல் கொண்டு வந்த சட்டதிருத்த மசோதாவுக்கு அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் 20 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்துள்ளது. ஜனாதிதி தகுதிநீக்கம் செய்தால் 20 ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியிழக்க நேரிடும். இதனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.