இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் குஜராத்தின் முதல் பெண் முதல்வருமான ஆனந்தி பென் படேல், மத்திய பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி, இந்தியப் பிரதமராக பதவி ஏற்றபோது அம் மாநிலத்தின் முதல்வராக ஆனந்தி பென் படேல் நியமிக்கப்பட்டார். பின்னர் வயது மூப்பு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகினார். கடந்த ஆண்டு குஜராத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்.
இந்நிலையில், மத்திய பிரதேச ஆளுநராக ஆனந்தி பென் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தமிழக ஆளுநராக நியமிக்க சில முயற்சிகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
குஜராத் பாஜக.வை சேர்ந்தவர்களில் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஆனந்தி பென் படேல் 2ஆவது நபராவார். இதற்கு முன்னர் பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாஜுபாய் வாலா, கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.