சிங்கள குடியேற்றங்கள் தமிழர்கள் நாடுபூராகவும் வாழ்வது போன்றல்ல
வாரத்திற்கொரு கேள்வி
இவ்வாரம் கொழும்பில் இருந்து கிடைத்திருக்கும் கேள்விக்குப் பதில் தரப்படுகின்றது.
கேள்வி–தமிழ்க் கட்சிகள், ஏன் நீங்களும் கூட, வட மாகாணத்தில் சிங்கள மக்கள் குடிகொள்ளப் பார்க்கின்றார்கள், எமது பாரம்பரியம் அழியப் போகின்றது என்றெல்லாம் குரல் எழுப்புகின்றீர்கள். தமிழராகிய நாம் பெருவாரியாக கொழும்பில் குடியிருக்கின்றோமே அது சிங்களப் பாரம்பரியத்தை அழிப்பதாக அர்த்தம் கொள்ள முடியாதா? நீங்கள் உங்கள் கூக்குரல்களால் கொழும்பில் வசிக்கும் எம்மையெல்லாம் அவதிக்குள்ளாக்கின்றீர்கள் என்பதை ஏன் புரிந்து கொள்ள மாட்டீர்கள்?
பதில் – நியாயமான கேள்வி! ஆனால் புரிந்துணர்வற்றது. ஒரு காலத்தில் அதுவும் என் சீவிய காலத்தில் தமிழ் மக்கள் நாடு பூராகவும் பரந்து வாழ்ந்தார்கள். காணிகள் வைத்திருந்தார்கள், கடைகள் வைத்திருந்தார்கள், கோயில்கள் கட்டி வழிபட்டு வாழ்ந்தார்கள். இது வெள்ளையர் ஆண்ட காலத்திலும் சிங்களம் மட்டுஞ் சட்டம் 1956ம் ஆண்டில் வரும்வரையிலும் இருந்த நிலை.
1958ம் ஆண்டு இனக்கலவரம் எம்முட் பலரை தெற்கிலிருந்து விரட்டியது. அதன்பின் 1961,1977,1983 என்று பல கலவரங்கள் தெற்கில் இருந்த தமிழ் மக்களை இருந்த இடந் தெரியாமல் விரட்டின. காணி பூமிகளை, ஆதனங்களை எல்லாம் பறிகொடுத்துவிட்டு எம்மவர் தெற்கைவிட்டு நீங்கினார்கள். தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பிரதேசங்கள் வடக்குக் கிழக்கே என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டு கப்பல்கள் மூலம் தெற்கில் வாழ்ந்த தமிழ் மக்களை வடக்குக் கிழக்கு நோக்கி அனுப்பி வைத்தனர். கொழும்பில் வாழ்ந்து வந்த என் தந்தையாரின் தம்பியார் எரிந்துகொண்டிருந்த தமது வீட்டை விட்டு விட்டு உடுத்த உடுப்புடன் குடும்பத்துடன் வெளியேறி மூன்று நான்கு நாட்களின் பின் கப்பலில் வந்து மானிப்பாயில் உறவினர்களின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். இப்படி எத்தனையோ ஆயிரம் பேர்! பலர் வெளிநாடுகள் சென்றார்கள். எனவே தென்னாட்டில் வாழ்ந்த தமிழர்கள் தொடர்ந்து அடித்து விரட்டப்பட்டனர். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தது –
கொழும்பு ஒரு சிங்கள நகர் அல்;ல. அது பல் இன, பல் சமய, பன்மொழி பேசும் மக்கள் வாழும் நகரம். நாட்டின் தலைநகரம். பாதுகாப்புக் கருதி முன்னரும், யுத்தத்தின் போதும், அதன் பின்னருங் கூட வட கிழக்குத் தமிழ் மக்கள் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் காணிகள் வாங்கி வீடு கட்டி வந்திருப்பது தமது தேவைகளின் நிமித்தம்; பல வித சொந்தக் காரணங்களின் நிமித்தமே.அவர்கள் தமது சொந்தப் பணத்தில், இல்லையென்றால் வங்கிகளிலோ வேறெங்கிருந்தோ கடன் எடுத்தே வீடுகள் கட்டினார்கள். ஆகவே கொழும்புநகரமானது,டச்சுக்காரர் காலத்தில் இருந்து, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சிங்கள நகர் அல்ல. பல்லின மக்களின் வாழ்விடம். அங்கு தமிழ் மக்கள் பாதுகாப்பு, கல்வி,சீதோஷ;ணநிலை,வேலைத்தள அண்மை போன்ற பல்வித தனிப்பட்ட காரணங்களுக்காகத் தமது சொந்தப் பணத்தில் வீடுகட்டி குடியிருந்து வந்தார்கள். ஆனால் அவ்வாறு வாழ்ந்து வந்த தமிழர்கள் அரசாங்க அனுசரணையுடன் 1958லும் 1983லும் அடித்துத் துரத்தப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.
ஆனால் வடகிழக்கு மாகாண சிங்களக் குடியேற்றங்கள் அப்படிப்பட்டதா?
1971 – 1972 அளவில் நான் திருகோணமலை சென்ஜோசப்ஸ் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய அருட் தந்தை சம்பா (இத்தாலியர்) அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன். நான் சென்ற நேரத்தில் சிறிமாவோ அம்மையார் காலத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட திருகோணமலையை அடுத்த சிங்களக் குடியேற்றங்களில் ஒன்றைப் பார்வையிட அவர் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அங்குள்ள கத்தோலிக்க மக்கள் சிலர் உதவிகேட்டு அவருக்குத் தெரியப்படுத்தியதால் அவர்களுக்கு உதவிபுரிய ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். நான் போகவும் ‘ஏன் நீங்களும் வாருங்களேன்’ என்றார். சென்றேன். அங்கு பல சிங்களக் குடியேற்ற மக்கள் மிகுந்த கஷ;டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதைக் கண்டேன். போஸ்ட்மாஸ்டர் என்று தன்னை அடையாளப்படுத்திய சிங்கள அன்பர் ஒருவர் என்னுடன் சிங்களத்தில் அளவளாவினார். என்பெயரைக் கேட்கவில்லை. என் பேச்சுச் சிங்களத்தில் தமிழர் சிங்களம் பேசும் சாயல் தெரியவில்லை போலும்!
என்னை சிங்களவர் என்றே எண்ணி கிட்டத்தட்டப் பின்வருமாறு கூறினார். ‘சேர்! நீங்கள் கொழும்பில் இருந்து வருகின்றீர்கள். எங்களை மாத்தறையில் இருந்து எமது அரசியல் வாதிகள் பலாத்காரமாக இங்கு குடியிருக்க அழைத்து வந்துள்ளார்கள். எமக்கு பலதையும் தருவதாக ஆசைகாட்டியே இங்கு கொண்டுவந்தார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. கிணறு வெட்டவில்லை, வீடுகள் கட்டித் தரவில்லை, உணவுப் பொருட்கள் அனுப்பவில்லை. நுளம்பு மருந்து அடிக்கவில்லை. சும்மா இந்த வரண்ட காட்டுக்குள் கொண்டுவந்து விட்டு விட்டுப் போய்விட்டார்கள். வெய்யிலைப் பாருங்கள். மரஞ்செடி கொடி எல்லாம் கருகி இருப்பதைப் பாருங்கள். தண்ணீர் கொண்டுவர பல மைல்கள் செல்ல வேண்டும். தமிழர்கள் இடங்களை நாங்கள் ஆக்கிரமிக்க வேண்டும் என்று கூறித்தான் கொண்டுவந்தார்கள். நாமும் சிங்கள இனத்துக்கு சேவை செய்யப்போகின்றோம் என்று இங்கு வந்தோம். எமக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி எதனையுமே வழங்கவில்லை. என்னை போஸ்ட்மாஸ்டர் வேலை செய்யச் சொல்லியுள்ளார்கள். ஆனால் அதற்கான வசதியைச் செய்து தரவில்லை. நீங்கள் கொழும்பு தானே? இதையெல்லாம் போய் அவர்களுக்குச் சொல்கின்றீர்களா?’ என்று கேட்டார். தொடர்ந்து பேசியவை இத் தருணத்தில் தேவையில்லாதபடியால் கூறாது விடுகின்றேன்.
ஆனால் நான் தெரியப்படுத்தும் விடயம் என்னவென்றால் சிங்கள மக்கள் தாங்களாக தன்னிச்சையாக வடகிழக்குக்கு வரவில்லை.கல்வி தேடி வரவில்லை, தமக்கான காணிதேடிக்கூட வரவில்லை, சீதோஷ;ணம் நாடி வரவில்லை. அரசியல் வாதிகளின் பலாத்காரத்தின் நிமித்தம் வந்தார்கள்அல்லது ஆசைகாட்டியதால் வந்தார்கள். அரசாங்க அனுசரணைகள் கிடைக்கும் என்ற ஆவலினால் உந்தப்பட்டு வந்தார்கள். அவர்கள் அப்படியிருந்தும் கஸ்டப்பட்டு தொடர்ந்திருந்ததால் இன்று ஜெயந்திபுர, அசோகபுர, சிரிமாபுர என்றெல்லாம் புரங்கள் வளர்ந்துவிட்டன. இவ்வாறுதான் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பித்தன.
சில காலத்தின் பின்னர் அரசாங்க அனுசரணைகள் அவர்களுக்குக் கிடைத்ததாக அறியவந்தேன்.அருட்தந்தை சம்பா போன்றவர்களின் தொடர்பாடலினால் அவை பெறப்பட்டன என்று அறிந்தேன். அவர் மனிதாபிமான அடிப்படையில் அவற்றைப் பெற்றுக் கொடுத்தார்.
ஆகவே உங்களிடம் நான் கேட்பது தமிழர்கள் தெற்கில் வந்து வசிப்பதற்கும் சிங்களவர்கள் வடக்கில் வந்து வசிப்பதற்கும் இடையில் ஒரு வித்தியாசத்தை உங்களால் உணர முடிகின்றதா என்பதையே? தமிழர்கள் தமது சொந்தப் பணத்தில் நாட்டின் தலைநகரத்தில் வீடு வாங்கி அல்லது வீடு கட்டி வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் இடமாற்றங்களுக்குப் பல பிரத்தியேகக் காரணங்கள் இருந்தன, இருக்கின்றன. ஆனால் சிங்களவர்கள் ஆசைகாட்டியோ அல்லது பலவந்தத்தின் பேரிலோ அரசாங்கத்தால் அல்லது சிங்கள அரசியல் வாதிகளால் கொண்டுவரப்பட்டு தமிழ் மக்கள் காலாதிகாலமாக வாழ்ந்த இடங்களில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு அரச அனுசரணையுடன் படையினர் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றார்கள்.ஒன்று தனிப்பட்டவர் குடியிருப்பு; மற்றையது திட்டமிட்ட அரச குடியேற்றம். முன்னையோர் அரச அனுசரணை எதுவுமின்றி சொந்தப் பணத்தில் கொழும்பில் வாழ வந்தவர்கள்.மற்றையோர் திட்டமிட்டு தமிழர் தாயகத்தைத் தம்வசமாக்க பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டவர்கள்.
ஆகவே பின்னையோரின் குடியேற்றம் எமது பாரம்பரியத்தை அழிக்கவென்று திட்டமிட்டு இயற்றப்படுகின்ற செயற்பாடு. எம்மை நாட்டின் பல பாகங்களிலும் இருந்து விரட்டி அடித்து விட்டு காலாதிகாலமாக நாம் வாழ்ந்து வரும் இடங்களையும் கையகப்படுத்த அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்டுவரும் நடவடிக்கை. எம்முள் 10 இலட்சத்துக்கு மேற்பட்டவரை நாட்டில் இருந்து விரட்டியாகிவிட்டது. தொடர்ந்து எமது பூர்வீக நிலங்கள் என்று இதுவரை அடையாளப்படுத்தப்பட்டு வந்த எமது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயலே இந்த அரச குடியேற்றம். இதை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன்னிச்சைக்குந் தான்தோன்றியான அரசியலிடைக்கும் இருக்கும் வேற்றுமையை அறிந்து கொள்ள வேண்டும்.
இன்று நடைபெறும் குடியேற்ற நிகழ்வுகள் பற்றி ஒரு வார்த்தை.
வவுனியாவில் கொக்கச்சான்குளம் என்ற பாரம்பரியமாகத் தமிழர் வாழ்ந்து வந்த ஒரு கிராமம் இருந்தது. அங்கு சில சிங்களக் குடும்பங்களும் அண்மைக் காலங்களில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் யாவரும் விவசாயிகள். போர்க்காலத்தின் போது தமிழ் மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டனர். சிங்களக் குடும்பங்கள் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். போர் முடிந்த பின் மிக அண்மையில் சிங்கள மக்கள் அங்கு இராணுவத்தினரால் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். சுமார் ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் ஹம்பாந்தோட்டையில் இருந்து அங்கு கொண்டுவந்து இராணுவத்தினரால் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரட்டியடித்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறமுடியாது. எவ்வாறெனினும் வெளிப்படைத் தன்மையுடன் அவர்களின் உறவு முறை எதுவும் ஆராயப்படவில்லை.
திடீரென கோக்கச்சான் குளம் கொளபஸ்ஃவவ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். சுமார் 1000 சிங்களக் குடும்பங்கள் வெகு விரைவில் குடியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மணலாறு என்று முன்னர் காலாதிகாலமாக எம்மால் அழைக்கப்பட்டுவந்த இடந்தான் தற்போதைய ஃவலிஓயா. முல்லைத்தீவைச் சேர்ந்த இந்த இடத்தில் தமிழ் மக்கள் பேர்மிட் பெற்று அல்லது உரித்தாவணங்கள் பெற்று வாழ்ந்து வந்தார்கள். போரின்போது அவர்கள் இடம்பெயர நேரிட்டது. பலர் தென்னிந்தியா சென்றிருந்தார்கள். திரும்பிவந்து பார்த்தால் அவர்களின் காணிகளுக்கு அரசாங்கம் புதிய உரித்துப் பத்திரங்களை வழங்கி 3000க்கும் மேலான குடும்பங்கள் அங்கு குடியிருந்ததைக் காணமுடிந்தது. இப்போது அது சிங்களக் கிராமமாக மாறிவிட்டது. சுமார் 2500 ஏக்கர் காணியை இவர்கள் பிடித்துள்ளார்கள். அனுமதிப்பத்திரங்கள் இருந்த மக்களின் காணிகளை பிறருக்கு அரசாங்கம் கையளிக்கும் போது அவற்றிற்கு அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே வழங்கியிருந்ததை அறியாமலா சிங்கள மக்களுக்கு அவற்றைக் கொடுத்தது? இவை திட்டமிட்ட செயல்களின் வெளிப்பாடுகள் அல்லவா? இனப்பரவலை மாற்ற எடுக்கும் முயற்சிகள் அல்லவா? இது சம்பந்தமாக அண்மையில் இயற்றப்பட்டுவருந் திட்டந்தான் திவுல்ஓயாத் திட்டம். அது பற்றிய முழு விபரங்களை எதிர்பார்த்திருக்கின்றேன்.
இன்னும் பல இடங்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. முன்னிக்குளம் மன்னாரில் இருக்கும் ஒரு கிராமம் . அதனைக் கடற்படையினர் கையகப்படுத்தி அங்கிருந்தவர்களை விரட்டிவிட்டு கடற்படையினரின் குடும்பங்களுக்குக் கொடுத்துள்ளார்கள். அங்கு வாழ்ந்த 2000க்கு மேற்பட்ட குடும்பங்கள் காடுகளுக்குள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர் என்று தெரியவருகின்றது.
மேலும் மன்னார் மதவாச்சி வீதியில் ஆங்காங்கே சிங்களக் குடும்பங்கள் கொண்டுவரப்பட்டு குடியிருத்தப்பட்டுள்ளனர். மடு ரோட்டில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களும் முருங்கனில் சுமார் ஐம்பது குடும்பங்களும் மீள்குடியேற்றம் என்ற பெயரில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். முன்னர் இருந்தவர்களின் வாரிசுகள் என்கின்றது அரசாங்கம். இந்தக் குடும்பத்தினர் அவர்களுடன் எவ்வாறு உறவுமுறை கொண்டாடுகின்றார்கள் என்பது புரியாத புதிராக இருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்னர் வன்னியில் காணி தேவையெனில் உடனே மனுச் செய்க என்ற ஒரு சிங்கள விளம்பரம் நாட்டின் பல பாகங்களிலும் ஒரு தொலைபேசி இலக்கத்துடன் பிரபல்யமாய் இருந்தது. ஒரு பௌத்த பிக்கு கொடுத்த விளம்பரம் அது என்று கூறப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில் வந்தவர்களோ இவர்கள் என்பதை நான் அறியேன். ஆனால் தகுந்த சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் அவர்கள் வந்தவர்கள் அல்ல.
மேலும் யாழ்ப்பாணம் நாவற்குழியில் 120 சிங்களக் குடும்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு படையினரும், தெற்கில் இருந்துவந்து பௌத்த பிக்குமாரும் உதவிகள் அளித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு தண்ணீர் முறிப்புக் குளத்திலும் சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருகிறது. இவற்றைவிட பாலதீவு, இரணைதீவு ஆகியன முற்றாகப் படையினர் வசம். முல்லைத்தீவில் 650 ஏக்கர் காணியைக் கடற்படை நிரந்தரமாகக் கேட்கின்றார்கள்.மன்னாரை அண்டிய தீவுகளும் அவர்கள் கைவசம். அவற்றை வைத்துப் பணம் உழைக்கின்றது கடற்படை.
போர் முடிந்த இடத்தில் 450 ஏக்கர் காணி ஏற்கனவே இராணுவத்தினர் கைவசம். மேலும் எமது சுற்றுலா மையங்கள் மத்தியின் கைவசம். சுற்றுலா உணவகங்கள் விடுதிகள் தென்னவர் கைகளில்.யு9 பாதையில் கடைகள் பல தென்னவர் கைகளில்.
ஆகவேசிங்களப் பாரம்பரியம் அழிவு நிலையில் உள்ளதா தமிழர் பாரம்பரியம் அழிவு நிலையில் உள்ளதா? நீங்களே கூறுங்கள். மேலும் விபரங்கள் வேண்டும் என்றால் என்னால் உங்களுக்கு அனுப்ப முடியும்.
அடுத்து நீங்கள் உங்கள் பாதுகாப்புப் பற்றி கரிசனை எழுப்புகின்றீர்கள். இந்தியா சென்று திரும்பியவர்கள் தாம் வாழ்ந்து வந்த மணலாறு காணிக்குச் சென்ற போது அங்கு வேற்று இன மக்கள் குடியிருந்ததைப் பார்த்த போது அவர்களுக்கு ஏற்பட்ட மனோநிலையைச் சிந்தித்தீர்களா? முன்னிக்குளத்தில் கடற்படையினர் தமது கிராமம் முழுவதையுமே கையகப்படுத்தி தம்மைக் காடுகளில் தஞ்சம் புக வைத்த போது அவர்களின் வேதனையை நீங்கள் சிந்தித்தீர்களா? பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த கோயில்கள் கட்டப்பட்டு படையினர் அனுசரணையுடன் தங்கள் காணிகளில் குடியிருக்கும் புத்த பிக்குகளை அவற்றின் சொந்தக்காரர்கள் காணும்போது அக் காணிச் சொந்தக் காரர்களுக்கு ஏற்படும் மன வேதனையை உணர்ந்தீர்களா? எத்தனையோ மன வேதனைகளை எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் உங்களுக்கு ‘நடக்கக்கூடும்’ என்று நீங்கள் அச்சப்படும் விடயங்கள் பெரிதாகிவிட்டன. இன்னுமொரு ஹ58 அல்லது ஹ83 கொழும்பில் நடக்க வாய்ப்பில்லை. எமது பிரச்சனைகள் இப்பொழுது உலகுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நடந்தால் அவை பற்றி நடவடிக்கை எடுக்க பன்நாடுகள் காத்திருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதாரம் மிகக் கேவலமான நிலையில் இருக்கின்றது. ஆகவே அரசாங்கம் இன்னொரு ஹ58 ஐயோ ஹ83 ஐயோ வர விடாது. கலவரங்களை அடக்கப் போதுமான இராணுவம் இப்போது தயார் நிலையில் உள்ளது. உங்களின் பயம் நியாயமற்ற பயம். ஆனால் எமது வடகிழக்கு மக்களின் அல்லல்களும் அல்லாடல்களும் அவர்களால் அனுபவிக்கப்பட்டுவரும் இன்றைய நிலை. தயவு செய்து சுயநலத்துடன் சிந்தித்து நடந்துகொள்வதைத் தவிப்பீர்களாக! நாம் எமது நிலங்கள், மொழி, கலாச்சாரம், பாரம்பரியம்,மதஸ்தலங்கள் பறிபோகப் போகின்றன என்று படபடத்துக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் உங்கள் தற்போதைய சொகுசு நிலை நீடிக்குமா என்ற எண்ணத்தில் இருக்கின்றீர்கள். உண்மையை உணர்ந்து கொள்ளப்பாருங்கள்! பாரிய இனஅழிப்பொன்று வடக்குக் கிழக்கில் நடைபெற்றுவருவதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
1 comment
வடக்குக் கிழக்கில் நடைபெற்றுவரும் பாரிய இனஅழிப்பை தடுக்கச் செய்ய வேண்டிய பணிகள்:
1.எல்லோரும் ஏற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்த வையுங்கள்.
2.மற்றவர்களில் தங்கி இருக்காமல் உலக செல்வாக்குமிக்க தமிழர்களாக மாறுங்கள்.
3.தமிழர்களின் வரலாற்றை பற்றி உலகறிய, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
4.இலங்கை, பண்டைத் தமிழர்களின் நிலம் என்று உலகறியச் செய்யுங்கள்.