குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தம் இடம்பெறும் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவது வழமையானதே என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சியனே வித்வத் சன்சதய என்னும் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றிற்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக அமெரிக்காவிலிருந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எந்தவொரு நாட்டிலும் யுத்தம் இடம்பெறும் காலங்களில் ஊழல் மோசடிகள் அதிகளவில் இடம்பெறுவது வழமையான நிலைமையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்த போதிலும் அந்த அரசாங்க ஆட்சியிலும் சில குறைபாடுகள் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது உயிர்த்தியாகத்துடன் செயற்பட்ட படையினரை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
நாட்டில் தற்போது ஸ்திரமற்ற நிலைமை நீடித்து வருவதாகவும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியாளர்களின் பிழையான கொள்கைகளினால் நாடு இன்று அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என கோதபாய ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.