குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பருவமடையாத சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 10ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிளிநொச்சியை சேர்ந்த 12வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருந்தார்
அது தொடர்பிலான வழங்கு விசாரணைகள் நடைபெற்று வந்த போது , பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் தோன்றி சாட்சியம் அளித்திருந்தார். அத்துடன் எதிரியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் , தான் மது போதையில் இருந்த சமயமே அச் சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
எதிரி தரப்பு சட்டத்தரணி மன்றில் கருணை விண்ணப்பம் செய்கையில் , எதிரி திருமணம் ஆனவர் எனவும் , அவருக்கு குழந்தைகள் உள்ளன எனவும் , அதனால் குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என விண்ணப்பம் செய்தார்.
அதன் போது அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் , குறித்த குற்ற செயலானது பாரதூரமானது , அதற்கு ஆக கூடியது 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் , குறைந்த பட்சம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்கின்றது என குறிப்பிட்டார்.
அந்நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்றினால் குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு இருந்தது. இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளிக்கையில் , எதிரியை இந்த மன்று குற்றவாளியாக கண்டு , சிறுமியை கடத்தி சென்றமைக்காக 02ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் , பாலியல் வன்புணர்வு குற்றத்திற்காக 10ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. இரண்டு சிறைத்தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க முடியும்.
மேலும் 10ஆயிரம் ரூபாய் தண்ட பணம் தண்டமாக விதிக்க படுகின்றது. அதனை கட்டத்தவறின் , 06 மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 02 இலட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் அதனை வழங்க தவறின் 02ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.