குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பல்கலைகழக முகாமைத்துவபீட மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் நால்வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு முகாமைத்துவ பீட 4ஆம் வருட மற்றும் 3 ஆம் வருட மாணவர்கள் யாழ்.பல்கலைகழகம் மற்றும் பரமேஸ்வர சந்தி பகுதியில் தமக்குள்ள மோதிக்கொண்டனர்.
அதில் தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் நான்கு பெரும்பான்மையின மாணவர்களை கைது செய்து இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி மாணவர்களுக்கு பிணை வழங்க வேண்டும் என கோரி பிணை விண்ணப்பம் செய்தார்.
பிணை விண்ணப்பத்தினை நிராகரித்த நீதிவான் , பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன அதனால் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். என தெரிவித்து நான்கு மாணவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிவான உத்தரவிட்டார்.