குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களே என்னை பலவீனப்படுத்த வேண்டாம் எனக்கு சக்தியை கொடுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி பற்றி மஹிந்த ராஜபக்ஸ தற்போது பெரிதாக பேசுகின்றார் என்ற போதிலும், ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக மஹிந்த வாக்களிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு ரவி கருணாநாயக்க பாராளுமன்றை விட்டு வெளியே வந்த போது, மஹிந்த தொலைபேசி அழைப்பினை எடுத்து வாழ்த்து கூறினார், இது எனக்கு நன்றாக தெரிந்த காரணத்தினால் குறிப்பிடுகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
‘ரவி நான் வாக்களிக்க வரவில்லை உங்களுக்கு எதிராக, பிரச்சினை ஒன்றும் இல்லை அல்லவா? என மஹிந்த ரவியிடம் கேட்டிருந்தார் எனவும் இதனை சாட்சியங்களுடன் தாம் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் இப்போது மட்டும் இடம்பெறவில்லை எனவும், 2008ம் ஆண்டிலிருந்து இடம்பெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றம் இழைத்த அனைவரையும் தண்டிக்க வேண்டும் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டுமென பிரதமரிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.