காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக பீரங்கிகள் மூலம் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜம்முவின் கஞ்சக் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் இரவு மேற்கொண்ட தாக்குதலில்; ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் இந்த தாக்குதல்களில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் எல்லைப் பகுதியில் மக்களை வெளியேறாமல் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் தங்கள் பகுதியில் ஏதேனும் மர்ம பொருட்கள் காணப்பட்டால் அதனைத் தொட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் வியாழக்கிழமை முதல் எல்லைப் பகுதிகளில் இருந்து கிராம மக்கள் சுமார் 40 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மறுவாழ்வு முகாம் களுக்கும் உறவினர் இல்லங்களுக்கும் சென்று தஞ்சமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.