நிற வெறிக்கெதிரான போராளியும், தென்னாபிரிக்க ஜாஸ் இசையுலகின் தந்தை என அறியப்படும் மாபெரும் இசைக் கலைஞனுமான> ஹியூ மசெக்கெலா (Hugh Ramopolo Masekela) காலம் ஆகினார். புற்று நோய்க்கு இலக்காகி இருந்த மசெக்கெலா, தனது 78 ஆவது வயதில் இன்று ஜொகனஸ்பேர்க்கில் காலம் ஆனார்..
வெள்ளையரின் நிறவெறி ஆட்சிக் காலத்திற்கு, உட்பட்டு இருந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில், இசையை ஆயுதமாக ஏந்திய மாபெரும் கலைஞனாக ஹியூ மசெக்கெலா தன்னை அடையளப்படுத்தினார். நிற வெறிக்கு எதிராகவும், 1976 இல் தென்னாபிரிக்க சுவெட்டோவில் மாணவர்களால் நடத்தப்பட்ட எழுச்சியைக் குறித்தும், மசெக்கெலாவால் எழுதப்பட்ட சுவெட்டோ ப்லூஸ் Soweto Blues என்றபாடலும், 1986 இல் அவர் வெளியிட்ட நாளை (Tomorrow) என்ற இசைப்பேழையின் முதற்பாடலும், நிறவெறிக்கு எதிரான பிரசாரப் பாடலாக ஒலித்த, Bring him back home என்ற பாடலும் இன்று வரை உயிர்ப்போடிருக்கின்றன.
“தென்னாபிரிக்க விடுதலைப் போர் வரலாறானது, என்றுமே ஹியூ மசெக்கெலாவை மறந்து விடாது” எனத் தெரிவித்துள்ள, தென்னாபிரிக்க ஜனாதிபதி சூமா, தென்னாபிரிக்க இசை உலகும், ஒட்டு மொத்த தேசமும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பைச் சந்தித்திருப்பதாக தனது இரங்கல் செய்தியில் சுட்டிக் காட்டி உள்ளார்.
ஆபிரிக்க ஜாஸ் இசை ஆழுமையின் வாயிலாக உலகறிந்த பெருங்கலைஞனாக அறியப்பட்ட மசெக்கெலா, Grammy award, ரோட்ஸ் மற்றும் யோர்க் பல்கலைகழகங்களால் வழங்கப்பட்ட, கௌரவ கலாநிதிப்பட்டம். பிபிசி வானொலியின் சர்வதேச ஜாஸ் இசை விருது (2002 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.) முதலானவற்றிற்கு சொந்தக்காரராக விளங்கியவர்.
இவை தவிர இன்னும் பல சர்வதேச அங்கீகாரங்களையும் விருதுகளையும் வென்ற ஹியூ மசெக்கெலா, அவரின் இசைக்கு அப்பாலான சமூகப் பணிகளுக்காக என்றென்றும் வாழ்ந்திருக்கும், ஓர் ஒப்பீடற்ற இசைக் கலைஞனாக இன்னும் பலநூற்றாண்டுகளுக்கு மானுடத்தின் விடுதலையை தன் இசையால் வளமூட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.