யாழில்.நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண சபையை புறக்கணித்து நடைபெறுவதாக வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சரின் கருத்தை முற்றாக மறுதலித்துள்ளனர் யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினர்.
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வு வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது.
இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் இத்தருணம் வரை வட மாகாண சபையின் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போ கிடைக்கவில்லை.என வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டி இருந்தார்.
அது தொடர்பில் வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் க. விக்னேஷ் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே கருத்துதெரிவிக்கையில் ,
மத்திய அரசுக்கும் இந்த கண்காட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை நாமே ஏற்பாடு செய்து கடந்த 08 வருடமாக கண்காட்சியை நடாத்தி உள்ளோம். இம்முறை 09ஆவது தடவையாக நடத்த உள்ளோம்.
இந்த கண்காட்சி தொடர்பில் முதலமைச்சருக்கு முன்னதாகவே தெரியப்படுத்தி உள்ளோம். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் இந்த கண்காட்சியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு , காட்சி கூடத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் நாம் வடமாகாண சபையை புறக்கணிக்கின்றோம் எனும் அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வடபகுதியில் பலமான ஒரு வர்த்தக அமைப்பாக நாம் உள்ள போதும் வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் எம்மை அமைச்சர் ஒரு தடவை கூட சந்திக்க வில்லை. எம்முடன் இதுவரையில் தொடர்பு கொள்ளவும் இல்லை.
கடந்த 08 வருடங்களாக நாம் கண்காட்சியினை நடாத்தி உள்ளோம். அதில் வடமாகாண சபையின் பங்களிப்பு என்ன என்பது கூட தெரியவில்லை. ஆனால் , கான்காட்சி ஊடாக இலாபங்களை பெறுகின்றார்கள்.
எங்களுக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. எமக்கு பின்னல் எந்த அரசியல் கட்சியோ , அரசியல் வாதிகளோ இல்லை. நாங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றோம். எங்களின் நோக்கம் வர்த்தக அபிவிருத்தியே .
இந்த கண்காட்சி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கபப்ட்டு உள்ளது.
எமக்கு யாரையும் புறக்கணித்து இக் கண்காட்சியை நடாத்த வேண்டிய தேவையில்லை. அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த கண்காட்சியினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.