குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்ச்சன்( Bryce Hutchesson ) இது பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் பொய்களைக் கண்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த 2017ம் ஆண்டில் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த 29 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் நோக்கில் இலங்கையிலிருந்து புறப்பட்ட சிலரை இலங்கை அதிகாரிகள் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் அல்லது நியூசிலாந்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து புகலிடம் பெற்றுக்கொள்ள முடியும் என சில தரப்பினர் பிழையாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற அனைத்து புகலிடக் கோரிக்கையாளர் படகுகளும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு மிகவும் வலுவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.