குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில்.பதுங்கு குழியில் மறைந்திருந்த கொள்ளை கும்பலில் இருவரை சாவகச்சேரி காவல்துறையினர்; கைது செய்துள்ள நிலையில் , மூவர் தப்பி சென்றுள்ளனர். இச் சம்பவம் தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் இடம்பெற்று உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
யாழ் – மன்னார் பிரதான வீதியில் கேரதீவு பகுதியில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் பல உணவு பொதிகளுடன் செல்வதனை சிவில் உடையில் நின்ற காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் கண்ணுற்று குறித்த நபரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
காவல்துறை உத்தியோகஸ்தர் பின் தொடர்ந்து சென்ற நபர் மறவன்புலவு பகுதியில் உள்ள பதுங்கு குழி ஒன்றினுள் செல்வதனை அவதானித்து அது தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பதுங்கு குழி இருந்த இடத்திற்கு சென்ற போது , காவல்துறையினரைக் கண்ட , பதுங்கு குழியில் இருந்த நபர்கள், அருகில் இருந்த கடல் நீரேரி ஊடாக தப்பியோடியுள்ளார்கள்.
தப்பியோடியவர்களை துரத்தி சென்ற காவல்துறையின் இருவரை பிடித்த நிலையில் ஏனைய மூவர் தப்பி சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் பதுங்கு குழியிருந்த பகுதிக்கு கொண்டு சென்று பதுங்கு குழியில் தேடுதல் நடத்திய வேளை பதுங்கு குழியில் இருந்து , ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும் , இரண்டரை பவுண் நகையும் மீட்கபட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்ட போது சந்தேக நபர்கள் குறித்த நபர்கள் நாவற்குழி மற்றும் அளவெட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் , மீட்கபட்ட நகைகள் மற்றும் பணம் என்பன கேரதீவு வீதியில் உள்ள வீடொன்றிலும் , நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றிலும் கொள்ளையிடப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து நேற்று புதன் கிழமை இரு சந்தேக நபர்களையும் , சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இருவருவரையும் , எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது
கடந்த மூன்று மாத கால பகுதியாக தென்மராட்சி தெற்கு பகுதி தொடக்கம் , தனங்கிளப்பு வரையிலான பிரதேசங்களில் இரவு வேளைகளில் பல வீடுகளில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை தச்சன் தோப்பு பகுதியிலும் , மறுநாள் சனிக்கிழமை கைதடியிலும் நகைகள் பணம் என்பன கொள்ளையிடப்பட்டு உள்ளன. கொள்ளை கும்பல் வீட்டின் கதவுகளை கோடரியால் கொத்தி உடைத்து வீட்டினுள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை மிக மோசமாக தாக்கி , கொள்ளையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.