தமிழகத்தை மாத்திரமின்றி இந்தியாவையே உலுக்கியது உடுமலை சங்கர் கொலை வழக்கு. இந்த வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி உலகின் கவனத்தை ஈர்த்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் இன்று காலை திடீர் மரணமடைந்தார்.
திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த அலமேலு நடராஜனுக்கு 52 வயதாகும். இவர் உடுமலை சங்கரை கௌரவ கொலை செய்த 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கினார். இந்திள அளவில் மாத்திரமின்றி உலக அளவிலே கௌவுரவ கொலைக்கு எதிராக இவர் வழங்கிய தீர்ப்பு பேசப்பட்டது.
கடந்த சில நாட்களாக நீதிபதி அலமேலு நடராஜன் நுரையீரல் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 11.37 மணிக்கு நீதிபதி அலமேலு நடராஜன் காலமாகியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
கோவை போத்தனூரை சேர்ந்த நீதிபதி அலமேலு நடராஜன் தனது பள்ளி மற்றும் சட்டபடிப்பை திருச்சியில் கற்றுள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாக பொறுப்பேற்ற இவர், கோவை, வேலூர் மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாகவும் கடமை ஆற்றினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி ஏற்று பணியாற்றி வந்த நீதிபதி அலமேலு, வழக்குகளை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கியவர் என்ற பெருமையை பெற்றவர். உடுமலை சங்கர் கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுகளில் 2 முறை விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.