குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா என்பது குறித்து விசாரணை நடத்தக் கூடாது என ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா இல்லையா என்பதனை கண்டறியும் வகையிலான உளவியல் ரீதியான பரிசோதனைகள் நடத்தப்படக் கூடாது என தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கை குறித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது பால்நிலை தொடர்பில் இவ்வாறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனினும் இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளார்களா இல்லையா என்பது குறித்து பரிசோதனை நடத்துவது பொருத்தமற்றது என ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளுக்கும் அறிவித்துள்ளது.
ஆபிரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களது நாடுகளில் தண்டிக்கப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு நைஜீரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தாம் ஓரினச் சேர்க்கையாளர் என்ற காரணத்தினால் தமது நாட்டில் தண்டிக்கப்படக்கூடுமெனக் கூறி ஹங்கேரியில் புகலிடம் கோரியிருந்தார்.
எனினும் அவரை உளவியல் ரீதியாக சோதனையிட்ட மருத்துவர்கள் அவரை ஓர் ஓரினச் சேர்க்கையாளர் என அடையாளப்படுத்த முடியாது என கூறி புகலிடக் கோரிக்கையை நிராகரித்திருந்தனர். ஐரோப்பிய நீதிமன்றின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் குறித்த நைஜீரிய பிரஜை மீளவும் புகலிடம் கோரி மேன்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது