பெரும்பான்மையின மாணவர்களால் தாக்கப்பட்டு காயத்திற்கு உள்ளான யாழ் பல்கலை வவுனியா வளாக மாணவனை, அவரது சக நண்பர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது “நீங்கள் விடுதலைப்புலிகள், அதனால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்” என பெருன்பான்மை இன மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது, பெரும்பான்மை மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விடுதி காப்பாளர் சென்ற றிலையில் பெரும்பான்மை இன மாணவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர், தாக்குதலுக்கு இலக்கான மாணவனை அவரது நண்பர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். குறித்த மாணவனுக்கு நெஞ்சு, வாய் பகுதிகளில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் வைத்தியசாலைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
நேற்றரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட தமிழ் மாணவன் தங்கியிருந்த விடுதிக்கு இரவு சென்ற, இரண்டாம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன மாணவர்களே, இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவருகிறது.
இது குறித்து வவுனியா வைத்தியசாலை காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.