குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
போதையில் நின்ற காவற்துறையினர் , பொதுமகன் ஒருவர் போதையில் வாகனம் செலுத்தியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்கள் என சட்டத்தரணி யால் யாழ்.நீதவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, இளைஞர் ஒருவர் போதையில் மோட்டார் சைக்கிளில் செலுத்தினார் என யாழ்.காவற்துறையினர் வழக்கு தாக்கல் செய்து இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.
அதன் போது குறித்த இளைஞர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தி. கணதீபன் குற்றசாட்டை மறுத்ததுடன், காவற்துறையினர் மதுபோதையில் பொய் வழக்கு சோடித்துள்ளனர் என காவற்துறையினர்மீது குற்றம் சுமத்தினார்.
அது தொடர்பில் சட்டத்தரணி மன்றுக்கு தெரிவிக்கையில் ,
குற்றம் சாட்டப்பட்டு உள்ள நபர் சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தனது வீட்டுக்குள் சென்ற போது, வீதியால் வந்த யாழ். காவற்துறை நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து காவற்துறையினர் வீட்டினுள் நின்றவரை அழைத்து மோட்டார் சைக்கிள் ஆவணங்களை காண்பிக்குமாறு கோரியுள்ளனர்.
அதற்கு அவர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மோட்டார் சைக்கிளுக்கு ஆவணங்களை ஏன் கேட்கின்றீர்கள் , அதனை காண்பிக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
அதனால் காவற்துறையினர் அவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அதனை அடுத்து வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை வீதியின் நடுவே இழுத்து சென்று நிறுத்திய பொலிசார், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளைஞரை தாக்கி கைது செய்து இளைஞரையும் , மோட்டார் சைக்கிளையும் காவற்துறை நிலையம் கொண்டு சென்றனர்.
காவற்துறை நிலையத்தில் போதையை கண்டறியும் ” பலூன் ” ஊதுமாறு இளைஞரிடம் கேட்ட போது அவர் அதனை ஊதிய போது அதன் நிறம் மாறவில்லை. அதனால் போதையில் நின்ற போக்குவரத்து காவற்துறையினர் தாம் அந்த “பலூனை” ஊதியுள்ளனர். அதன் நிறம் மாறியுள்ளது.
அதனை தொடர்ந்து இளைஞரை மிரட்டி அச்சுறுத்தி அவரது கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் ஒரு நாள் முழுவதும் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். என சட்டத்தரணியால் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.
சட்டத்தரணியின் குற்ற சாட்டை காவற்துறையினர் மறுத்தனர். இல்லாதா விடயங்களையும் , பொய்களையும் சட்டத்தரணி கூறுகின்றார். என காவற்துறையினர் மன்றில் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து நீதிவான் குறித்த வழக்கினை விளக்கத்திற்காக திகதியிட்டு ஒத்திவைத்தார்.