பெங்களூருவில் நடைபெற்று வரும் 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை எடுக்கத் தவறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11-வது வருட போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் மே மாதம் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்வருடத்துக்கான வீரர்களின் ஏலம் பெங்களுருவில் இன்று காலை தொடங்கியது.
இதில் ஒவ்வொரு அணியும் ஏற்கனவே தங்களது அணியிலுள்ள தலா மூன்று வீரர்களை “ரைட் டு மேட்ச்” என்ற முறையின் மூலம் தக்க வைத்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்திருந்தது.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்று வரும் ஏலத்தில் சென்னை அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை கிங்ஸ் XI பஞ்சாப் அணி 7.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அஸ்வினுக்கான ஏலத் தொகை நான்கு கோடியை அடையும் வரை ஆர்வம் காண்பித்த சென்னை அணி, அதன் பிறகு பின்வாங்கியது. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நிலவிய கடும் போட்டிக்கு பிறகு 7.6 கோடிக்கு அஸ்வினை பஞ்சாப் அணி வாங்கியது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஸ்வின், “கிங்ஸ் XI பஞ்சாப் அணி தனது புதிய வீடாக உள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகவும், சென்னை அணி அளித்த அனைத்து சிறப்பான நினைவுகளுக்கும் நன்றி” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை இரண்டு கோடி ரூபாய்க்கும், மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிராவோவை 6.40 கோடிக்கும் சென்னை அணி வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாடவுள்ள ஹர்பஜன் சிங் இதுகுறித்து ட்விட்டரில், “வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு” என்று தமிழ் மொழியில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் சென்னை அணி வீரரும், 2016ம் ஆண்டு வரை பஞ்சாப் அணிக்காக விளையாடியவருமான முரளி விஜய்யை வாங்குவதற்கு இதுவரை எந்த அணியும் ஆர்வம் காண்பிக்கவில்லை. பிபிசி