உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் விபத்து மூவர் பலி…
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது வேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் 3 பேர் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள ஸ்வரூப் நகருக்கு அருகில் உள்ள நரேந்திர மோகன் பாலத்தில் கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேர் தூக்கி எறியப்பட்டனர். இடித்த வேகத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனேவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாமன் திவாரி மற்றும் ஜெயந்த் யாதவின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது நபர் இனம் காணப்படவில்லை. இந்த விபத்து குறித்து காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 23 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து மரணம்..
ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 23 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார். ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நேற்று இரவு உள்ளூரைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. அதன்போது ஒரு அணியைச் சேர்ந்த இளைஞரான லாயிட் அந்தோணி பந்துவீச ஓடிய போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்த அந்தோணி கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பெண் உட்பட இரண்டு நக்சல்கள் இன்று காலை பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள டாத்மேட்லா, மோர்பல்லி கிராமத்திற்கு இடையே உள்ள வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததனை அடத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தததாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றி வளைக்கப்பட்டதை அறிந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டதாகவும், பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுது நேரம் தொடர்ந்த இந்த தாக்குதலில் பெண் உட்பட இரண்டு நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.