இந்தியத் தலைநகர் டெல்லியில் நேற்று குடியரசு தின நிகழ்வு நடைபெற்ற வேளையில் பத்மஸ்ரீ விருது பெற்றவருடன் இந்தியப் பிரதமர் மோடி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
மேற்குவங்க மாநிலத்தில் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தனது இருசக்கர வாகனம் மூலம் நோயாளர் காவு வண்டிச் சேவை (அம்புலன்ஸ்) நடத்தி வரும் ஜல்பைகுரி பகுதியைச் சேர்ந்த கரிமுல் ஹக் என்பவருடனேயே இவ்வாறு செல்பி எடுத்துக்கொண்டார்.
போக்குவரத்து வசதிகளற்ற அந்தப் பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், தனது இருசக்கர அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற இவர் உதவுகின்றார். இவரின் சேவையைப் பாராட்டி கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருததை இந்திய அரசு வழங்கியது.
இந்நிலையில் குடியரசு தின நிகழ்ச்சியை காண கரிமுல் ஹக் டெல்லிக்கு வந்துள்ளார். ராஜபாதையில் அணிவகுப்பு மரியாதை முடிந்தவுடன் பிரதமர் மோடி தனது வாகனத்தில் ஊர்வலமாக வந்து மக்களைச் சந்தித்தார். அப்போது, கரிமுல் ஹக்கை பிரதமர் மோடி அடையாளம் கண்டுகொண்டார்.
அவர் அருகே சென்ற பிரதமர் மோடி அவரிடம் பேசினார். அப்போது பிரதமர் மோடியிடம் தன்னுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள முடியுமா? என கரிமுல் ஹக் கேட்டார். அதற்கு பிரதமர் மோடி சம்மதிக்கவே அவரின் மொபைல் போனில் இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பின்னர் அவரிடம் சில நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி அங்கிருந்து சென்றார்.
இதேவேளை, எங்கள் கிராமத்தின் குறுக்கே செல்லும் ஆற்றில் பாலம் விரைவில் கட்டி முடிக்கப்படும் மோடி வாக்குறுதி அளித்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.