குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் தர்சிக்கா விமலசிறியிடம், புலனாய்வுப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தாருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய சிலரிடம் வாக்கு மூலங்கள் பதியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ரக்பி வீரர் வசீம் தஜூடீனின் கொலை இடம்பெற்ற தினம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர் ஒருவர் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான இரண்டு வாகனங்களில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பயணித்திருந்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், அத்துடன் தாஜூடீனின் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவு வைத்திருந்த சிலரிடம் வாக்குமூலம் பெற்று, விசாரணைகளை முன்னெடுப்பது அவசியம் எனவும் பிரதி சொலிசிட்டர் நாயகம் டிலான் ரத்நாயக்க நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினார்.
இந்த கொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்குத் தேவையான வாக்குமூலத்தை இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள கொழும்பு முன்னாள் பிரதம சட்ட வைத்தியர் போராசிரியர் ஆனந்த சமரக்கோன், இரண்டு வாரங்களுக்குள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் வழங்க வேண்டும் என நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
2012 மே மாதம் 1ம் திகதி தொடக்கம் 2012 மே மாதம் 30ம் திகதி வரையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயன்படுத்தப்பட்ட கடற்படை வாகனங்கள் இரண்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர்கள், குறித்த இரண்டு வாகனங்களிலும் கடற்படை உத்தியோகத்தர்கள் இருவர் பயணித்ததாக தகவல் பதிவாகியுள்ளதுடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் டிலான் ரத்நாயக்க குறிப்பிட்டார். இந்த வகையில் சந்கேதத்திற்கு இடமான தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு போதியளவு கால அவகாசம் தேவை என நீதிமன்றில் அறிவிக்க்பட்டுள்ளனர். இதனை அடுத்து எதிர்வரும் மே மாதம் 3ம் திகதிக்கு, இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.