மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரிவானதொரு செயற்திட்டத்தினை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மலையகத்தில் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக அரசாங்கம் என்றவகையில் சகல உதவிகளும் வழங்கப்படும் என ஜனாதிபதி; இன்று (28) பிற்பகல் தலவாக்கலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்யும் பொருட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சகல மக்களினதும் பிரச்சினைகள் தொடர்பாக தமக்கு சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி இந்த பிரச்சினைகளைத் தெளிவாக ஆய்வுசெய்து அவற்றிற்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தலே தனது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
தேயிலைக் கைத்தொழிலின் மேம்பாட்டிற்கான விசேட செயற்திட்டமும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி தேயிலை, தென்னை உள்ளிட்ட சகல ஏற்றுமதிப் பயிர்களினதும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை நுவரெலிய மாவட்ட மருத்துவமனையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகக் கண்டறிய, குறித்த மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு;வரும் புதிய கட்டிட தொகுதியைப் பார்வையிட்ட ஜனாதிபதி மாவட்ட மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக அந்த நிர்மாணப்பணிகளைத் துரிதமாக நிறைவு செய்யுமாறும் ஆலோசனை வழங்கினார்.
சுமார் 600 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகளை உடைய இந்த மருத்துவமனை, சத்திரசிகிச்சை வசதிகளையும் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்குமான தங்குமிட வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது