குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் சவால் விடுத்துள்ளார். முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனி ஆட்சி கொண்டு வந்தால் 2020ம் ஆண்டு தற்பேதைய பிரதமரை ஜனாதிபதியாக்கி காட்டுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஹட்டனில் இன்றைய தினம் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை அளித்து இன்றைய ஜனாதிபதியை ஆட்சிபீடம் ஏற செய்தோம் எனவும், இவருக்கு எதிராக வாக்களித்தவர்களுடன் ஜனாதிபதி கைகோர்த்து தலவாக்கலையில் ஒன்று சேர்ந்துள்ளார் எனவும் , தம்மை மறந்து விட்டார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி எதிரணியினர் 99 பேர் என்னுடன் இருந்தால் புதிய அரசை உருவாக்குவேன் என சவால் விட்டுள்ளார் எனவும், எம்மிடம் 108 அங்கத்தவர்கள் இருந்தும் தனி ஆட்சியை நாம் செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்காக ஒதுக்கிய 1300 மில்லியன் ரூபாவை ஏப்பமிட்டவர்கள் இன்று ஜனாதிபதியுடன் கைகோர்த்துள்ளனர் எனவும், இவர்கள் தொடர்பாக நாம் நிதி மோசடி குற்ற பிரிவுக்கு அறிவித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.