குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மலையக மக்கள் தேயிலை காணிகளுக்கு சொந்தகாரர்களாக ஆக வேண்டும் என்றால் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இவ்வாறு காணிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆவது எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் உங்கள் கைகளில் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் தலவாக்கலையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது உங்கள் மத்தியில் பலர் வந்து வாக்குகளை கேட்கின்றார்கள் எனவும், நான் கேட்பது ஒரே கேள்வி தான் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்ததா ? இதே தலவாக்கலை மைதானத்தில் ஒருவர் சொல்லிவிட்டு சென்றாரே இது ஞாபகம் இருக்கின்றதா ? உங்களுடைய ஊழியர் சேமலாப நிதி யானை வயிற்றுக்குள் போயுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு தோட்டங்களில் அங்குள்ள மக்கள் தேயிலை காணிகளை சொந்தமாக பராமரிப்பது போல் எமது மக்களுக்கும் இரண்டு அல்லது மூன்று ஏக்கர்களை சொந்தமாக்கும் வாய்ப்பை எமக்கு தாருங்கள் என பெருந்தோட்ட கம்பனி அதிகாரிகளிடம் தாம்; கேட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று இந்த மேடைக்கு வருவதற்கு முன்பாக கொட்டகலையில் ஜனாதிபதி தோட்ட அதிகாரிகளை சந்தித்தார். பல விடயங்கள் அங்கு வினவப்பட்டது. இதன்போது நான் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தேர்தலின் பின் கொழும்பில் வைத்து ஆராய்ந்து பேசுவொம் என ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வகையில் பல தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சார கூட்டங்களின் போது நான் கூறிய நாட்டு தோட்டத்தில் தேயிலை பராமரிப்பு போல் எமது மக்களுக்கும் பிரித்துக் கொடுக்கும் விடயம் தேர்தலுக்கு பின் கலந்தாலோசித்து தீர்வு எட்டப்படும் என தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று நடப்பது தொகுதிவாரியான தேர்தலாகும். இதில் நமது பிரதேசத்தை நாமே ஆளக்கூடிய சந்தரப்பம் உள்ளது. நமது பிள்ளைகளே நம்மை எதிர்வரும் 10ம் திகதிக்கு பின் ஆள்வார்கள் என தெரிவித்துள்ளார். இதில் சிலர் சில்லறை விளையாட்டுக்களை காண்பிப்பார்கள். இன்று உங்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் உங்களுக்கெ விருந்து வைக்கின்றார்கள். தோட்ட தலைவர்களுக்கு சீனா நாட்டு பெண்கள் ஊடாக விருந்தளிக்கப்பட்டு பணம் திணிக்கப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேபோன்று நமது பெண்களை மதுசாலைகளுக்கு உள்ளாக்கி விருந்தளிக்கப்படுகின்றது. இது அவர்களின் கட்சிக்கு பொருந்தும் ஆனால் இ.தொ.காவின் கொள்கை அடிப்படையில் எமது தலைவர்கள், தலைவிகள் சோரம் போக மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ம் திகதி காலையில் வாக்கு சாவடிக்கு சென்று முறையாக வாக்குகளை அளியுங்கள், 11ம் திகதி நாம் அனைவரையும் விரட்டியடிப்போம் என தொண்டமான் தெரிவித்துள்ளார்.