பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை கொளத்தூரில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் வைகோ மற்றும் தொல் திருமாளவன் உட்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்து கட்டணத்தை முழுமையாக குறைக்க வலியுறுத்தி தமிழகம் எங்கும் மேற்கொள்ளப்பட்;ட ஆர்ப்பாட்டங்களை அடுத்து நேற்று தமிழக அரசு சொற்ப அளவில் பேருந்து கட்டணத்தை குறைத்திருந்தது. எனினும் இந்த கட்டண குறைப்பு என்பது கண்துடைப்பு எனத் தெரிவித்து திமுக இன்று தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சியினரின் பங்களிப்புடன் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்தார். அவருடன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனர்
இதனைத் தொடர்ந்து மறியல் பேரணியின் முடிவில் கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் அரசுப் பேருந்தை மறித்து ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேவேளை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். வீதியின் இரு மருங்கிலும் நடைபெற்ற மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மறியல் போராட்டத்தால் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதகிளில் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பெரவள்ளூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.