பாரதீய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், தமிழகத்தில் பல இடங்களில் திடீரென பேரணி நடத்தியுள்ளனர். சென்னையில் நடைபெற்ற பேரணியில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா, நடிகர் விசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிகளுக்கு பொதுவாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. வட மாநிலங்களில் மதவன்முறைகளுக்கு அடிப்படையாக இருப்பதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிகளே என கூறப்பட்டு வருகிறது. லக்னோவில் தற்போது நடைபெற்று வரும் மதவன்முறைகளுக்கு காரணமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணி என கண்டனங்கள் எழுந்துள்ளன.
இப்படி பேரணிகளை நடத்தி அதன் மூலம் ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி கலவராமாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதே பாஜகவின் வியூகம். இதனாலேயே தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா தலைமையிலான அரசுகள் ஆர்.எஸ்.எஸ். பேரணிகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை. எனினும் ஜெயலலிதா மறைந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறி ஓபிஎஸ் அரசு சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது.
தற்போது ஆண்டாள் விவகாரம், மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்தை காஞ்சி சங்கரச்சாரி விஜயேந்திரர் அவமதித்தது என கொந்தளிப்பான நிலை இருந்து வருகிறது. இதனை அரசியலாக்கி ஆதாயம் தேடவும் பாஜக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதையின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நேற்று திடீரென பேரணிகளை நடத்தியுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா சீருடையில் பங்கேற்றார். சிரிப்பு நடிகர் விசுவும் இந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்றார். ஆனால் எந்த ஒரு இடத்திலும் வட இந்தியாவைப் போல வன்முறை சம்பவம் எதும் நிகழவில்லை. தற்போதைய பதற்றமான அரசியல் சூழலில் இத்தகைய பேரணிகளுக்கு தமிழக அரசு அனுமதித்ததே மிக மோசமானது என விமர்சனம் எழுந்துள்ளன.