மிகவும் ஆபத்தான நாடுகள் என வரையறுத்து, பதினொரு நாடுகளில் இருந்து அகதிகள் தம் நாட்டிற்குள் நுழைய விதித்திருந்த தடையை இப்போது அமெரிக்கா நீக்கி உள்ளது. எனினும் இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய விரும்புபவர்கள் புதிய பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டிற்குள் யார் நுழைகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வது தங்களுக்கு மிக முக்கியமான ஒன்று என இது குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்ட்ஜென் நீல்சன், தெரிவித்துள்ளார். எகிப்து, ஈரான், ஈராக், லிபி;யா, மாலி, வடகொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் அகதிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தன.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளில் 40 சதவிகிதத்தினர் இந்த 11 நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் டிரம்ப் அரசாங்கம், தடை விதித்தப் பின், இந்த 11 நாடுகளிலிருந்து 23 பேர் மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைந்தார்கள் எனவும், அந்த 23 பேரும் ஒரு சட்ட அனுமதிக்குப் பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள் எனவும் ரொயிட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.