ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பிரிவினைவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமனின் ஜனாதிபதி அபெத் ராப்போ மன்சூர் ஹாதியின் ராணுவத்துக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகின்றது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற இந்த உள்நாட்டுப் போர் காரணமாக இது வரை 9245 மக்கள் உயிரிழந்துள்ளதுடன் 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த பிரிவினைவாதக்குழுவானது கடந்த மாதம் ஏடன் நகரில் உள்ள அரச கட்டிடங்களை கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது ஏடனில் உள்ள ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ஜனாதிபதி மாளிகைதான் சர்வதேச ஆதரவினை பெற்ற ஏமன் அரசின் தலைமையிடமாக செயல்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஏமனின் ஷாப்வா மாகாணத்தில் உள்ள ஒரு சோதனைச்சாவடி மீது தற்கொலைப் படையினர் நேற்று மேற்கொண்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.