வாரத்துக்கொரு கேள்வி
வடக்கு முதல்வரின் வாரம் ஒரு கேளிவியும் பதிலும் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாரக் கேள்வி வேலைப்பளுக்களின் நிமித்தம் சற்றுத் தாமதமடைந்தே பதிலிறுக்கப்பட்டது. அந்த வகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் வழங்கிய முக்கிய பதில் இங்கு தரப்படுகிறது.
கேள்வி – வடக்கு மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் உதவிகளை நீங்கள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறதே? அதற்கு உங்கள் விளக்கம் என்ன?
பதில் – எதனை நாங்கள் புறக்கணித்தோம்? எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவ்வாறான பேச்சுக்கள் எழ காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சில மாதங்களுக்கு முன் ஒரு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் என்னிடம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கக் காணி வேண்டும் என்று கேட்டார். நாங்கள் மண்டைதீவில் காணியை அடையாளப்படுத்தி எங்கள் மற்றைய அலுவலர்களுடன் சென்று எனது பிரத்தியேகச் செயலாளர் காணியைக் காட்டினார்.
பின்னர் காணியைத் தமக்கு மாற்றித் தரும்படி கேட்டார். அதற்கு நான் இசையவில்லை. நாம் இந்த செயற்றிட்டத்தை பங்குதாரர்களாகச் செய்வோம் என்றேன். அப்படியில்லை. வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் கிடைக்கப்போகின்றது. ஆகவே காணியை எமது பெயருக்கு மாற்றினால்த்தான் அவர்களுடன் பேசிப் பணம் பெறமுடியும் என்று கூறினார். நாங்கள் தானே நன்மை அடையப்போகின்றவர்கள். எம்முடன் சேர்ந்து நடைமுறைப்படுத்தினால்த்தான் பொருந்தும் என்றேன்.
ஏற்கனவே இவ்வாறான கிரிக்கெட் மைதானங்கள் நாட்டின் வேறு இடங்களில் கட்டப்பட்டு அவை போதுமானவாறு பாவிப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. அவை சம்பந்தமாக பலவிதமான குற்றச்சாட்டுக்களையும் பலர் கூறக்கேட்டுள்ளேன். ஆகவேதான் எமது கட்டுப்பாட்டுக்குள் இந்தச் செயற்றிட்டம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.பல மாதகாலம் இதுபற்றி எதுவும் அவர் பேச முன்வரவில்லை. மிக அண்மையில் ஆளுநருடனும் யாழ் அரசாங்க அதிபருடனும் அதே காணியைப் பார்க்கப் போயிருந்ததாகப் பத்திரிகையில் வாசித்தேன். காணியை விடுவிக்க அவர்கள் என்னிடம் வர வேண்டும் என்ற படியால் நான் வாளாதிருக்கின்றேன். இவ்வாறான நடவடிக்கைகள் உங்களுக்கு எமது புறக்கணிப்பாக எடுத்துக் கூறப்பட்டதோ எனக்குத் தெரியாது.
நாங்கள் சில தருணங்களில் வெளிப்படையாகவும் பொறுப்புக் கூறலுக்கு மதிப்பளித்தும் நடவடிக்கைகளைக் கொண்டு நடாத்த முற்பட்டால் அது அரசாங்க உறுப்பினர்களையுந்தான், தனியார் துறையினரையுந்தான் சற்று பின்வாங்க வைக்கின்றது. காரணம் பலர் பிழையான நடவடிக்கைகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள். வெளிப்படைத்தன்மையைப் புறக்கணிக்கின்றார்கள். அதற்கான காரணத்தை யூகிக்கலாம். தனிப்பட்ட நன்மைகளைப் பெற தரப்பார் ஏங்குகின்றார்கள் என்பதே காரணமாக இருக்க முடியும். ஆகவே வடமாகாண மக்களுக்குக் கிடைக்கும் உதவிகளைப் புறக்கணிக்க நாங்கள் மக்கள் கரிசனை அற்றவர்கள் அல்ல. அதே நேரத்தில் எம்மை வஞ்சித்து சுரண்டிச் செல்லவும் விடமாட்டோம்.
இது விடயமாக வேறு சில விடயங்களை இத்தருணத்தில் கூறவேண்டியுள்ளது. உதாரணத்திற்கு இன்றைய (31.01.2018) தமிழ் மிரரின் பக்கம் 3 ஐப் பாருங்கள். ‘வடகிழக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும்’ என்ற தலையங்கத்தின் கீழ் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வட கிழக்கு மக்களுக்கு நன்மை பயப்பதான சில திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அதைக் கவனமாக வாசித்துப் பார்த்தால் யாருக்கு இந்த உதவிகளை பெற்றுக் கொடுக்க அவர் விருப்பமாக இருக்கின்றார் என்பது புரியும். மொரகஹகந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வடமேல் கால்வாய் அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி பெறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மொரகஹகந்த திட்டம் பல வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது. ஆனால் மகாவலி நதியின் ஒரு சொட்டு நீர் கூட வடமாகாணத்திற்கு இதுவரை வரவில்லை. ஆனால் வரவிருக்கும் நீரை மேற்கோள் காட்டி ‘எல்’ வலயம் என்ற வலயத்தைத் திறந்து அங்கு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. ஆகவே வட கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டதாயினும் வடகிழக்கில் உள்ள சிங்கள பலவந்தக் குடியேற்ற வாசிகளின் நன்மையையே அது குறிக்கின்றது.
இன்னொன்றைக் கூறுகின்றேன். பலவிதமான பிரச்சனைகளை எங்கள் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் வேளையில் அண்மையில் ஒரு அமைச்சர் வன்னியில் 600 ஏக்கர் காணியை திறந்த மிருகக் காட்சிப் பூங்கா அமைக்க விட வேண்டும் என்று கேட்டிருந்தார். அதாவது சுற்றுலாப் பயணிகள் ‘ஸ்ஃபாரி’ (ளுயகயசi) எனப்படும் மிருகக் காட்சி பெற சவாரியில் செல்லக்கூடிய விதத்தில் ஒரு பூங்கா அமைக்கக் கேட்டிருந்தார். யானைகளின் நடைபவனிப் பாதை செல்லும் வழியை ஆராய வேண்டியிருந்தது. வன மிருகங்கள் இவ்வாறான சவாரிகள் அமைப்பதால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துவன என்ற விடயம் பரிசீலிக்கப்பட வேண்டியிருந்தது. இவற்றையெல்லாம் பரிசீலிக்காது யாரோ கேட்டார் என்பதால் நாம் கொடுக்க முன்வந்தோமானால் அதில் எங்காவது சில சிக்கல்கள் ஒளிந்து கொண்டிருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருந்தோம். ஆகவே எனது தாமதம், நான் அவர்கள் செயற்றிட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன் என்று அமைச்சரை வெளிப்படையாகக் கூறவைத்தது.
அடுத்து இன்னுமொரு நிகழ்வு. சில வருடங்களுக்கு முன்னர் மத்தியுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒருவர் உரிய அறிக்கைகளைப் பெறாது, தக்கதா அந்தச் செயற்றிட்டம் என்பதை ஆராயாமல் எமது தீவகப் பகுதியில் 30 தட்டுகளுக்கும் மேலான அடுக்கு மாடிக் கட்டடத்தை சுற்றுலா உணவகத் தங்குமிடத்திற்காகத் தேர்ந்தெடுத்து அஸ்திவாரமும் வெட்டத் துணிந்தார். அதிர்ஸ்ட வசமாக எமது அப்போதைய அமைச்சர்களுக்கு அது தெரியவந்து அந்தச் செயற்றிட்டம் நிறுத்தப்பட்டது. முப்பதுக்கு மேற்பட்ட அடுக்கு மாடிக் கட்டடத்தை எமது தீவுகளில் கட்ட முயன்றால் தீவுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை நாம் மிக உன்னிப்பாக ஆராய வேண்டும். பணம் சம்பாதிக்கலாம் என்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் எமது மக்களும் அவர்களின் வாரிசுகளுமே காலக்கிரமத்தில் பாதிக்கப்படப் போகின்றவர்கள் என்பதை நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
அரசாங்கம் வருமானம் ஈட்டுதலை மட்டுமே ஒரேயொரு குறிக்கோளாக வைத்து சில தருணங்களில் செயற்றிட்டங்களை வடமாகாணத்திற்கு வகுக்கின்றார்கள். அது தவறு. எமது சுற்றுச் சூழல், சீதோஷ;ண நிலை, கலை கலாச்சாரப் பின்னணி, எமது வாழ்க்கை முறை, எமது எதிர்பார்ப்புக்கள் போன்ற பலதையும் கணக்கில் எடுத்தே இவற்றை வகுக்க வேண்டும். இதற்காகத்தான் சட்டம் பலவிதமான அறிக்கைகளைக் கோரி நிற்கின்றது. சுற்றுச் சுழல் அறிக்கை, கடற்கரைப் பாதுகாப்பு திணைக்கள அறிக்கை என்ற பலதையும் சட்டம் எதிர்பார்க்கின்றது. எம்மவர் இவற்றையெல்லாம் புறக்கணித்துத் தமக்குத் தனித்துவமாகக் கிடைக்க இருக்கும் நன்மைகளை முன்வைத்தே தீர்மானங்களை எடுத்து வந்துள்ளார்கள் போலத் தெரிகின்றது. பதவி இருந்தால் எதையுஞ் செய்யலாம் என்ற தப்பவிப்பிராயத்தை நாங்கள் இனியேனும் நீக்கிக் கொள்ள வேண்டும். பின்பற்றி நடக்கவே சட்டம் என்றொன்று உண்டு.
செலவைக் குறைக்க சில ஒப்பந்தக்காரர்கள் குறைபாட்டுடன் பள்ளிக் கூடக் கட்டடங்களைக் கட்டி எழுப்புகின்றார்கள். சில வருடங்களில் அவை பழுதடைந்து வீழ்ந்து சில நேரங்களில் குழந்தைகளின் உயிர்களையும் பறித்து விடுகின்றன. நாம் வருங்காலத்தை யோசிக்காது உடனே கிடைக்கும் நன்மைகளை மட்டும் பார்த்தோமானால் அது பல சிக்கல்களை எமக்கு உண்டாக்கும்.
அரசாங்க உதவிகளை நாங்கள் இன்னொரு கண்கொண்டும் நோக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மை அரசாங்கங்கள் எந்தக் காலத்திலும் எமது உரித்துக்களை முழுமையாகத் தரப்போவதில்லை என்பதே எனது கணிப்பு. தருவதாகக் கூறுவதெல்லாம் பாசாங்கு. தருவதாக இருந்தால் எம்முடைய வாக்கின் நிமித்தம் பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே எமது பிரச்சனைகளைத் தீர்த்திருக்கும். தீர்க்க மனமில்லை. தருவோம் தருவோம் என்பார்கள் ஆனால் தரமாட்டார்கள். ஆனால் ஏதோ ஒரு நிறுவனத்தின் பணத்தை எமக்குச் செலவழிக்க முன்வருவார்கள். உதாரணத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணத்தைத் தருவதாகக் கூறுவார்கள். அவர்களுக்கு அந்தப் பணம் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்று கூறி தாம் எமக்காகக் கடன்பட்டுள்ளதாகக் கூறுவார்கள். ஆனால் எமது உரிமைகள் எவற்றையுந்தர மறுப்பார்கள்.
ஆகவே தரவருபவர்களின் தானத்தின் தாற்பரியங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது உரித்துக்களைத் தராது விடுத்து எமக்கு பொருளாதார உதவிகள் பலதையும் அளித்து எம்மைத் தம் கட்டுப்பாட்டுக்குள் நிரந்தரமாக வைத்திருப்பதை எமது மக்கள் விரும்புகின்றார்களா என்பதை முதலில் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்.
என்னைப் பொறுத்த வரையில் எமது உரிமைகளே முதன்மையுடையது. மற்றவை யாவும் பின் செல்பவை.
உதவிகள் பெற்றுக்கொண்டால் நாம் அவர்களுக்கு கடமைப்பட்டுவிடுகின்றோம். அதன் பின் சிங்களக் குடியேற்றம், படையினர் தொடர் வசிப்பு, மீன்பிடியில் தென்னவர் ஆக்கிரமிப்பு என்று பலதையும் நிரந்தரமாக்கி விடுகின்றார்கள். நாம் பேசா மடந்தைகளாக கைகட்டி வாய்புதைத்து நிற்கின்றோம். எனினும் உதவிகள் எமக்குத் தேவை. கட்டாயந் தேவை. மனிதாபிமானத்துடன் தரப்படும் உதவிகளை நாம் பெற்று வருகின்றோம்.
மேற்கூறிய எனது கருத்துக்களே நான் மத்தியின் உதவிகளைப் புறக்கணிக்கின்றேன் என்று கூற வைத்திருக்க வேண்டும். நான் புறக்கணிக்கவில்லை. நாம் பங்குதாரர்களாக செயற்றிட்டங்களில் பங்காற்ற வேண்டும் என்ற எமது உரிமை சார்ந்த கருத்துக்களை வலியுறுத்தியிருக்கின்றேன். அவ்வளவுதான்.
தென்னாபிரிக்காவில் முதலில் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்தார்கள். அதன் பின்னரே உண்மைக்கும் நல்லுறவுக்குமான ஆணைக்குழுவை அமைத்தார்கள். நாம் முதலில் எமது உரித்துக்களை உரியவாறு பெற்றுக் கொள்ளாது விட்டால் காலக்கிரமத்தில் ‘உங்களுக்கு நாம் அது தந்துவிட்டோம் இது தந்துவிட்டோம்’ என்று கூறி மேலும் எதுவும் அரசியல் ரீதியாகத் தரமுடியாது என்று கைவிரித்து விடுவார்கள். அரசாங்கங்களோ தனியார்களோ கொண்டுவரும் சகல செயற்றிட்டங்களையும் உன்னிப்பாகக் கவனித்தே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்